விடியா திமுக அரசின் கையாலாகாத்தனம்! `விசாகா கமிட்டி' என்ன ஆச்சு? எச்சரிக்கையுடன் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு அறிக்கை!
ADMK EPS Condemn to DMK Govt MK Stalin Visaka Committie
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், "பெண்கள் மரியாதையுடனும், கௌரவத்துடனும், பாதுகாப்புடனும் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழ் நாடு மாறிவிட்டதற்கு மற்றும் ஒரு சம்பவம் சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அப்பாவி பெண்களை 'சார்'-களுக்கு இரையாக்கும் ஒருசில திமுக நிர்வாகிகளின் லீலைகள் ஒருபுறம் தொடர்ந்தாலும், மறுபுறம் கல்வியைக் கற்பிக்கும் ஒருசில ஆசிரியர்கள் தங்கள் வரம்புகளை மீறி உளவியல் ரீதியாக பெண்களை, குறிப்பாக உடன் பணியாற்றும் ஆசிரியைகளையும், மாணவிகளையும் தகாத வார்த்தைகளில் பேசுவதும், வரம்பு மீறிய செயல்களில் ஈடுபடுவதும் இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
'சென்னை பல் மருத்துவக் கல்லூரியில்' பணிபுரியும் ஒரு துறையின் தலைவர், உடன் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் கல்வி கற்கும் மாணவிகளிடம் ஆபாச வார்த்தைகளைப் பேசுவது; உடல் உருவ அமைப்பை கேலி செய்வது; அவர்களை வீடியோ படங்கள் எடுப்பது; பேசுவதை ரெக்கார்டு செய்வது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வருவதால், அக்கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியைகளும், மாணவிகளும் தினம் தினம் மன உளைச்சலைச் சந்தித்து அவதியுற்று வருகின்றனர்.
ஒரு துறையின் தலைவர் இவ்வாறு நடந்துகொள்வதை கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டியும், பாதிக்கப்பட்ட பெண்கள் கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதமே கல்லூரி நிர்வாகத்திடம், தகாத செயல்களில் ஈடுபடும் பேராசிரியரைப் பற்றி புகார் அளித்தும், பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை; அவரது செயல்களைக் கண்டிக்கவும் இல்லை. இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட ஒரு பேராசிரியை இந்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.
பெண்கள் பணிபுரியும் இடங்களில் `விசாகா கமிட்டி' அமைக்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல் என்ன ஆனது? மாணவிகள் புகார் கொடுத்தும் ஒருவருட காலமாக
ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு எந்த அரசியல் தலைவரின் தலையீடு, யாருடைய அழுத்தம்? போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
ஏற்கெனவே, அண்ணா பல்கலைக்கழக பாலியல் புகாரில் `விசாகா கமிட்டி' பற்றி அமைச்சர் ஒரு பதிலும், காவல் ஆணையாளர் ஒரு பதிலும் கூறி இருந்தது அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்த நிலையில், தற்போது, விடியா ஸ்டாலின் மாடல் அரசு இந்தப் பல் மருத்துவக் கல்லூரிக்கு `விசாகா கமிட்டி' குறித்து என்ன பதில் அளிக்கப் போகிறது? இந்நிகழ்வு, இந்த விடியா திமுக அரசின் கையாலாகாத்தனத்தை வெட்ட வெளிச்சமாகக் காட்டுகிறது.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று ஆசிரியரை தெய்வமாக வணங்கும் வழியில், 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' எனும் பாரதியின் வரிகள் நமக்கு நினைவுக்கு வருகின்றன.
ஆனால் இன்று, பெண்களை இழிவுபடுத்துவது மட்டுமல்லாமல், 'பல சார்களுக்கு இரையாக்கும் நிகழ்வுகளும்' அன்றாடம் நடந்த வண்ணம் இருந்தாலும், இதைப்பற்றி எந்தக் கவலையும் இன்றி தினம் தினம் மக்களை ஏமாற்றும் விளம்பர மாடல் முதலமைச்சரின் நிர்வாகச் சீர்கேட்டால் இன்று தமிழ் நாடு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகத் திகழ்கிறது.
பெண் பிள்ளைகளை பள்ளிக்கும், கல்லூரிக்கும் அனுப்புவதற்கே பெற்றோர்கள் அஞ்சி நடுங்கும் நிலை இந்த நீர்வாகச் சீர்கேடான ஆட்சியில் ஏற்பட்டுள்ளது கொடுமையிலும் கொடுமை. இதற்கொரு முடிவு கட்டும்வரை நாங்கள் ஓயமாட்டோம்.
"வேலியே பயிரை மேய்வது போல்" இன்று கல்வியை கற்றுக்கொடுக்கும் கல்வி வளாகங்களிலேயே பாலியல் வன்கொடுமைகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நடைபெறுவதற்கு, எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நிர்வாகத் திறமையற்ற பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இனியாவது பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதுடன், தமிழ் நாட்டில் எந்த இடத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டாலும், மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தயங்காது என்று எச்சரிக்கிறேன்" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK EPS Condemn to DMK Govt MK Stalin Visaka Committie