சிவகங்கை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய துயர்துடைப்பு நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: சீமான் வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


சிவகங்கை சிங்கம்புணரி கல்குவாரி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்கை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மல்லாங்கோட்டை கிராமத்தில் முறைகேடாக இயங்கி வந்த தனியார் கல்குவாரியில் பாறைகளை உடைக்கும்போது நிகழ்ந்த விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

விதிகளை மீறி தமிழ்நாடு முழுவதும்  அனுமதிக்கப்பட்ட அளவினை விடவும் அதிகமாக பாறைகளை வெட்டி கனிம வளங்கள் கடத்தப்படுவதையும், அது குறித்து புகாரளிக்கும் சமூக ஆர்வலர்கள் கொடூரமாக  கொல்லப்படுவதையும்  தடுக்கத்தவறி திமுக அரசு வேடிக்கைப்பார்ப்பதே  இதுபோன்ற விபத்துகள் நடைபெற்று அப்பாவித் தொழிலாளர்கள் உயிரிழக்க அடிப்படை காரணமாகும்.

கனிமவளக் கடத்தல்காரர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசு, புகாரளிப்பவர்கள் மீது பொய் வழக்கு புனைந்து சிறையலடைப்பது மற்றுமொரு பெருங்கொடுமையாகும். இயற்கையின் எல்லா வளங்களையும் சுரண்டி விற்று அழித்து முடித்துவிட்டு வருங்காலத் தலைமுறைக்கு எதை வைத்துவிட்டு போகப்போகிறோம் என்ற கேள்விக்கு நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் என்ன பதில் கூறப்போகிறார்கள்?

சிங்கம்புணரி கல்குவாரி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன். தமிழ்நாடு அரசு உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

 விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு உயர் மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.'' என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman insists on providing appropriate compensation to those who died in the Sivaganga quarry accident and a government job to one of the family members


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->