அரசியலை தாண்டி அனைவரையும் மதிக்க வேண்டும்- விஜய்க்கு அட்வைஸ் சொன்ன நடிகர் சூரி!
Actor Soori advises Vijay to respect everyone beyond politics
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று நடிகர் சூரி தனது பிறந்த நாளை முன்னிட்டு சாமி தரிசனம் செய்தார். கோவிலை விட்டு வெளியே வந்ததும், அவரை சுற்றிய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து, அவருடன் செல்ஃபி எடுத்து கொண்டதில் கோவில் வளாகம் உற்சாகமாக காட்சி அளித்தது.
பின்னர் நிருபர்களிடம் பேசிய சூரி, “இன்று எனக்கும் என் தம்பிக்கும் பிறந்தநாள். நாங்கள் ராமனும் லட்சுமணனும் போல இரட்டை பிறவிகள். ராமன் என்ற பெயர் சூரி ஆக மாறியிருக்கிறது. எனது உணவக வளர்ச்சிக்கு நான் மட்டுமல்ல, என் அண்ணன், தம்பிகள்தான் காரணம். அதுவே எனக்கு பெருமை,” என்றார்.
தனது திரைப்படங்களைப் பற்றி கூறிய அவர், “மாமன் படப்பிடிப்புக்கு பிறகு, தற்போது ‘மண்டாடி’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போலவே, கடலில் நடைபெறும் போட் ரேசிங் மண்டாடி படத்தின் மையக் கருவாக உள்ளது. படம் வெளிவந்ததும் புதிய விஷயங்களை ரசிகர்கள் அறிந்து கொள்வார்கள்,” எனக் கூறினார்.
மேலும் சினிமா உலகில் காமெடி நடிகர்களின் நிலையைப் பற்றி சூரி, “இப்போது திரையில் காமெடி நடிகர்கள் குறைந்து வருகின்றனர். ஆனால் காமெடி எப்போதும் பார்வையாளர்களால் ரசிக்கப்படும் வகையில்தான் உள்ளது. எனக்கு வாய்ப்பு கிடைத்தது போலவே, மற்றவர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அப்படியே எல்லோரும் வளர வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.
மதுரையில் நடைபெற்ற த.வெ.க. மாநாட்டில் முதல்வர் மீது வைக்கப்பட்டிருந்த விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு சூரி பதில் அளிக்க மறுத்தார். “எதுவாக இருந்தாலும் எல்லோருக்கும் எல்லோரும் தேவை. அரசியலைத் தாண்டி அனைவரும் அனைவரையும் மதிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
அதேபோல், நடிகர் விஜயின் அரசியல் பயணத்தைப் பற்றியும் சூரி கருத்து தெரிவித்துள்ளார். “இன்றைக்கு விஜய் சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு சென்றிருக்கிறார். அவர் மீண்டும் சினிமாவுக்கு திரும்பலாம். விஜய்யை அனைவரும் விரும்புகிறார்கள்; எனக்கும் அவரைப் பிடிக்கும். அவர் அரசியலுக்கு சென்றது அவரது சொந்த விருப்பம்,” என சூரி தெரிவித்துள்ளார்.
English Summary
Actor Soori advises Vijay to respect everyone beyond politics