ராஜஸ்தானில் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பைட்டோசார் புதைபடிவம் கண்டுபிடிப்பு!!
200 million year old phytosaur fossil discovered in Rajasthan
ராஜஸ்தானின் ஜெய்சல்மர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவங்கள், இந்தியாவில் முதன்முறையாக நன்கு பாதுகாக்கப்பட்ட ‘பைட்டோசார்’ (Phytosaur) எனப்படும் தொல்லுயிர் எச்சமாக அடையாளம் காணப்பட்டுள்ளன. முதலை போன்ற தோற்றம் கொண்ட இந்த உயிரினம், சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் இனத்தைச் சேர்ந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஜெய்சல்மர் மாவட்டத்திலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேகா கிராம மக்கள் ஏரிக்கரையில் தோண்டிக்கொண்டிருந்தபோது, இரண்டு மீட்டர் நீளமுள்ள இந்தப் புதைபடிவத்தை கண்டெடுத்தனர். உடனடியாக அவர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் புவியியலாளர்கள் ஆய்வு மேற்கொண்டதில், இது ஜுராசிக் காலத்தைச் சேர்ந்த பைட்டோசாரின் புதைபடிவம் என உறுதி செய்யப்பட்டது. இதனுடன் அதே இனத்தைச் சேர்ந்த ஒரு புதைபடிவ முட்டையும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜோத்பூரில் உள்ள ஜெய் நரேன் வியாஸ் பல்கலைக்கழகத்தின் மூத்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் வி.எஸ். பரிஹார் கூறுகையில்:"இந்த பைட்டோசார் முதலை போன்று தோற்றமுடையது. இது சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது. இந்தக் கண்டுபிடிப்பு, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஒரு நதி இருந்திருக்கலாம் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. மீன்களை உணவாகக் கொண்ட நடுத்தர அளவிலான பைட்டோசாராக இருக்கலாம். பைட்டோசார்கள் 229 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியவை. எனவே, இது ஆரம்பகட்ட ஜுராசிக் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம்" என்றார்.
ஜெய்சல்மர் புதைபடிவ ஆய்வுகளுக்கு தலைமை தாங்கும் புவியியலாளர் டாக்டர் நாராயண் தாஸ் இனகியா தெரிவித்ததாவது:
"சுமார் 180 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி டைனோசர்கள் வாழ்ந்த இடமாக இருந்தது. ஜெய்சல்மர் பகுதி புவியியலாளர்களால் ‘லாதி ஃபார்மேஷன்’ (Lathi Formation) என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள பாறை அமைப்பு, நன்னீர் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் இருந்ததைக் காட்டுகிறது. எனவே இங்கு பைட்டோசார் இருப்பது ஆச்சரியமல்ல. ஒருபுறம் நதியும், மறுபுறம் கடலும் இருந்திருக்கலாம்” என்றார்.
2023-இல் பீகார்–மத்தியப் பிரதேச எல்லையில் பைட்டோசார் வகை புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவில் முதன்முறையாக முழுமையாகவும் நன்கு பாதுகாக்கப்பட்ட பைட்டோசார் எச்சம் இதுவே என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எதிர்கால திட்டங்கள்
டாக்டர் நாராயண் தாஸ், ஜெய்சல்மரை புவியியல் சுற்றுலாத் தலமாக (Geo-tourism) உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், “இங்குள்ள புதைபடிவங்கள், கடல்சார் உயிரின எச்சங்கள், டைனோசர் தடங்கள் ஆகியவை அறிவியல் ஆய்வுக்காகவும், சுற்றுலாவுக்காகவும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில் ஜெய்சல்மர் பகுதியில் பல்வேறு தொல்லியல் கண்டுபிடிப்புகள் வெளியாகியுள்ளன. தியாத் கிராமத்தில் எலும்பு புதைபடிவங்கள், 2023-இல் டைனோசர் கால்தடங்கள் மற்றும் நன்கு பாதுகாக்கப்பட்ட டைனோசர் முட்டைகள் ஆகியவை கண்டறியப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
200 million year old phytosaur fossil discovered in Rajasthan