குறுவை தண்ணீருக்காக விவசாயிகள் இடையே மோதல்.!! ஒருவருக்கு அரிவாள் வெட்டு.!!
A farmer was slashed with sickle in dispute cultivation over irrigation
டெல்டா மாவட்டமான திருவாரூரில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீரை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி தொடங்கிய நிலையில் போதிய தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு சென்றடையாததால் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 25,000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகா பெருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கணேசன் மற்றும் வெங்கடாசலம் ஆகியோர் தங்கள் விவசாய நிலத்தில் குறுவை சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் வாய்க்காலில் தண்ணீர் குறைந்த அளவே வருவதால் இரு விவசாயிகளுக்கும் இடையே குறுவைக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் வெங்கடாசலத்தின் மகன் ஐயப்பன் தனது தந்தையிடம் தகராறு செய்த கணேசனிடம் வாக்குவாதத்தில் மீண்டும் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி உள்ளது. அப்போது ஐயப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கணேசனை தாக்கியதில் அவருக்கு தலையிலும் கையிலும் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் கணேசனை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த பெருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐயப்பன் தற்போது தலைமுறைவாக உள்ளதால் அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
குறுவை சாகுபடிக்கு நீர் பாய்சுவதில் இரு விவசாயிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் அரிவாள் வெட்டில் முடிந்திருப்பது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு கர்நாடக அரசிடமிருந்து உரிய காவிரி நீர் பங்கினை பெற்று குறுவை சாகுபடிக்கு உடனடியாக திறக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
A farmer was slashed with sickle in dispute cultivation over irrigation