குடிப்பழக்கத்தை மறக்க மருந்து சாப்பிட்ட 4 பேர் பலி!
4 people died after taking medicine to forget their addiction
குடிப்பழக்கத்தை நிறுத்த நாட்டு மருந்து சாப்பிட்டு பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. போலி நாட்டு வைத்தியர் சாயப்பா கொடுத்த நாட்டு மருந்து விஷமாக மாறி 4 பேர் பலியானதாக கூறப்படுகிறது.
கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டம் சேடம் தாலுகாவை சேர்ந்தவர் சாயப்பா என்ற தாயப்பா. நாட்டு வைத்தியர் ஆன இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு பழக்கத்தை கைவிட நாட்டு மருந்து கொடுத்து வந்துள்ளார். இந்தநிலையில் சேடம் அருகே புரகபள்ளி கிராமத்தை சேர்ந்த லட்சுமி, சித்தாப்புரா தாலுகா பீமனஹள்ளியை சேர்ந்த மனோகர், சகாபாத் டவுனை சேர்ந்த கணேஷ் ராத்தோட், நாகேஷ் ஆகிய 4 பேரும் குடிப்பழக்கத்தை மறப்பதற்காக சாயப்பா கொடுத்த நாட்டு மருந்தை 4 பேரும் வாங்கி குடித்துள்ளனர்.
அதே நேரத்தில் 4 பேரின் மூக்கு வழியாகவும் நாட்டு மருந்தை சாயப்பா ஊற்றியதாக கூறப்படுகிறது. அப்போது , திடீரென்று 4 பேருக்கும் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் நலக் கோளாறு பாதிப்பு ஏற்பட்டு உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு லட்சுமி, கணேஷ் ராத்தோட் உயிரிழந்தனர்.
மனோகர், நாகேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் அவர்களும் நேற்று அதிகாலையில் உயிரிழந்தார்கள். இதனால் குடிப்பழக்கத்தை நிறுத்த நாட்டு மருந்து சாப்பிட்டு பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் கலபுரகியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து சேடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சாயப்பா போலி நாட்டு வைத்தியர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலி நாட்டு வைத்தியரான சாயப்பாவை கைது செய்தனர். சாயப்பா கொடுத்த நாட்டு மருந்து விஷமாக மாறி 4 பேர் பலியானதாக கூறப்படுகிறது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் 4 பேரின் சாவுக்கு சரியான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
4 people died after taking medicine to forget their addiction