உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
Public have stormed the officials at the Stalin project camp with you
பேரம்பாக்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இருந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை வருவாய் கணக்கில் ஏற்றாததற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்தில் 1968, 1987, 1994, 2008, 2009 உள்ளிட்ட ஆண்டுகளில் ஆதிதிராவிட மக்களுக்கு இலவசமாக வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அவ்வாறு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களை கிராம வருவாய் கணக்குகளில் ஏற்றுமாறு தொடர்ந்து பல முறை மனு அளித்தும் வருவாய்த்துறை அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் பேரம்பாக்கம் அடுத்த இருளஞ்சேரி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் பேரணியாக நடந்து வந்து உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் இருந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை வருவாய் கணக்கில் ஏற்றாததற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓட்டு வாங்குவதற்கு மட்டும் நாங்களா ? மக்களுக்கு சேவை செய்வதில் நீங்கள் இல்லையா? அடுத்து ஓட்டு வாங்க வருவீங்களா? என போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சரமாரியான கேள்வியை எழுப்பினர். பட்டாவை கிராம வருவாய் கணக்குகளில் பதிவேற்றம் செய்யாததால் தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும், பிச்சையாக கேட்கிறோம். விரைவில் எங்களுக்கான பட்டாவை பதிவேற்றம் செய்து தர வேண்டும் என்றும், இல்லையேல் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் கிராம மக்கள் எச்சரித்தனர்.
இதனால் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. கோரிக்கை வலியுறுத்தி ஈடுபட்டவர்களிடம் திருவள்ளூர் (பொறுப்பு) தாசில்தார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
Public have stormed the officials at the Stalin project camp with you