காலா பட நடிகை ஹூமா குரேஷியின் சகோதரர் கொலை...! நடந்தது என்ன?
Kaala actress Huma Quresi brother murdered What happened
பாலிவுட் நடிகை மற்றும் காலா படம் மூலம் தமிழில் பிரபலமான 'ஹூமா குரேஷி'. அந்த நடிகையின் சகோதரர் ஆசிப் டெல்லி, நிஜாமுதீன் பகுதியில் ஜங்புரா போகல் என்ற இடத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவருடைய வீட்டின் பிரதான வாசலுக்கு முன்னால் இரு சக்கர வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக இரவு 11 மணியளவில் சில நபர்களுக்கும், ஆசிப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறின்போது அந்த நபர்கள், ஆசிப்பை கூர்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.இதில் படுகாயமடைந்த ஆசிப் ஆபத்தான நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்த நிஜாமுதீன் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.அப்போது ஆசிபின் மனைவி சைனாஸ் குரேஷி தெரிவிக்கையில்," இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் ஏற்கெனவே இதே பார்க்கிங் பிரச்சினைக்காக ஆசிப்புடன் தகராறு செய்துள்ளனர்.நேற்று ஆசிப் வேலையிலிருந்து திரும்பி வந்த போது, வீட்டின் பிரதான நுழைவு வாசலுக்கு முன்னால் பக்கத்து வீட்டுக்காரரின் இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததை பார்த்துள்ளார்.
பின்னர் அந்த வாகனத்தை அங்கிருந்து அகற்றுமாறு அவர்களிடம் தெரிவித்துள்ளார்.இருப்பினும், அவர்கள் அந்த வாகனத்தை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்குப் பதிலாக, ஆசிப்பை திட்டியுள்ளனர். அதைத் தொடர்ந்து கூர்மையான ஆயுதங்களால் ஆசிப்பை தாக்கினர்" என்று குற்றம் சாட்டினார்.
மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் ஒரு அற்ப விஷயத்திற்காக ஆசிப்பை இரக்கமின்றி தாக்கினர் என்று ஆசிப்பின் மனைவி மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதையடுத்து, காவலர்கள் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு 2 பேரை கைது செய்துள்ளனர்.
English Summary
Kaala actress Huma Quresi brother murdered What happened