பாதுகாப்புக் காரணங்களைக் கூறி இந்தியாவில் நடக்கும் ஆக்கி போட்டிக்கு முட்டுக்கட்டை போடும் பாகிஸ்தான்...!
Pakistan blocks hockey tournament India citing security reasons
6 அணிகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான தற்போதைய சூழலை காரணமாகக் குறிப்பிட்டு, போட்டியை பொதுவான இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் மற்றும் மொகாலியில் அக்டோபர் 27-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 6 அணிகள் கலந்து கொண்டு பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உணர்வுபூர்வமான சூழ்நிலையை கருத்தில் கொண்டும், வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் போட்டி நடைபெறும் இடத்தை மாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் ஆக்கி சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஆசிய ஆக்கி சம்மேளனத்திடம் பாகிஸ்தான் ஆக்கி சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போட்டியை இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என்பதே அந்த கோரிக்கையின் முக்கிய அம்சமாக உள்ளது.
பாகிஸ்தான் தரப்பின் இந்த எதிர்ப்பை தொடர்ந்து, ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறுமா அல்லது வேறு இடத்துக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், போட்டி நடைபெறும் இடம் தொடர்பாக ஆசிய ஆக்கி சம்மேளனம் எத்தகைய முடிவை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
English Summary
Pakistan blocks hockey tournament India citing security reasons