கிரிக்கெட் ஜாம்பவான் வெஸ்ட் இண்டீஸ் அணியை தட்டி தூக்கிய நெதர்லாந்து அணி.!!
Netherlands beat West Indies in Super Over
இந்தியாவில் 13-வது உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒரு நாள் போட்டியில் உலக தரவரிசை பட்டியலில் முதல் 8 இடம் பெற்ற அணிகள் நேரடியாக உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கின்றன. மீதமுள்ள 2 இடத்தை பிடிக்கும் அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
நேற்று ஏ பிரிவில் நடந்த போட்டியில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக போற்றப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் கத்துக்குட்டி அணியான நெதர்லாந்தை எதிர்கொண்டது. இந்த போடியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பௌலிங் தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் 76 ரன்கள், சார்லஸ் 54 ரன்கள் என இந்த ஜோடி துவக்கத்துடன் அடித்தளமிட்டது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷாய் ஹோப் 47 ரன்கள் எடுக்க நிகோலஸ் பூரன் சதம் விளாசினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 374 ரன்கள் என்ற இமாலய இலக்கை நெதர்லாந்து அணிக்கு நிர்ணயித்தது.
கடினமான இலக்கை துரத்திய நெதர்லாந்து அணியில் டெக்டர் 33 ரன்களும், கேம்பெர் 39 ரன்களும், டாக்ரெல் 26 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டைகளை இழந்தனர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணியின் வீரர் தேஜா தனது அதிரடி ஆட்டத்தால் சதம் விளாசனார். கேப்டன் எட்வர்ட்ஸ் 67 ரன் எடுத்தார்.

நெதர்லாந்து அணி வெற்றிக்கு கடைசி 12 பந்தில் 30 ரன் தேவைப்பட்ட போது சேஸ் வீசிய 49வது ஓவரில் 21 ரன்களை நெதர்லாந்து அணி எடுத்ததால் கடைசி ஓவரில் 9 ரன் தேவைப்பட்டது. அல்ஜாரி ஜோசப் வீசிய கடைசி ஓவரின் முதல் 5 பந்தில் 8 ரன் எடுத்தபோது ஸ்கோர் சமம் ஆன நிலையில் கடைசி பந்தில் வான் பீக் 28 ரன்னுக்கு அவுட்டாக நெதர்லாந்து அணி 50 ஓவரில் 374/9 ரன் எடுத்து போட்டி சமனில் முடிந்தது.
இதனால் இந்த போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணியின் வான் பீக், ஹோல்டர் ஓவரில் 3 சிக்சர், 3 பவுண்டரி என 30 ரன் விளாசினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 5 பந்தில் 8/2 ரன் மட்டுமே எடுத்ததால் நெதர்லாந்து அணி திரில் வெற்றி பெற்றது. கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை நெதர்லாந்து அணி வீழ்த்தியது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
English Summary
Netherlands beat West Indies in Super Over