திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம்! 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்!
thirupathy ezhumalaiyan temple piramochuvam
உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவம் இந்த மாதம் 24ஆம் தேதி கொடியேற்றத் தொடங்கி சிறப்பாக நடைபெற உள்ளது.
அன்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை சுவாமிக்கு காணிக்கையாக வழங்குகிறார். அதே இரவு, பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் வீதியுலா வருகிறார்.
செப்டம்பர் 25ஆம் தேதி காலை சின்ன சேஷ வாகன சேவையும், இரவு அன்ன வாகன சேவையும் நடைபெறும். 26ஆம் தேதி காலை சிம்ம வாகனம், இரவு முத்துப்பல்லக்கு வாகனம்; 27ஆம் தேதி காலை கற்பக விருட்சக வாகனம், இரவு சர்வ பூபால வாகனம் நடைபெற உள்ளது. 28ஆம் தேதி காலை மோகினி அலங்கார சேவை, இரவு கருடசேவை நடைபெறும்.
ஆறாம் நாளான செப்டம்பர் 29ஆம் தேதி காலை அனுமன் வாகன சேவை நடைபெறும். மாலை 4 மணிக்கு தங்கரத ஊர்வலம் நடைபெறுகிறது. அதே இரவு கஜ வாகன சேவை நடைபெறும். 30ஆம் தேதி காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை சேவைகள் நடைபெறும். அக்டோபர் 1ஆம் தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன சேவை நடைபெறும்.
இறுதிநாளான அக்டோபர் 2ஆம் தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை சக்கர ஸ்நானம் நடைபெறும். அதே நாள் இரவு 8.30 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.
பிரம்மோற்சவத்தின் போது தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரை, இரவு 7 மணி முதல் 9 மணி வரை வாகன சேவைகள் நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
thirupathy ezhumalaiyan temple piramochuvam