அஜித்தின் 'கிளாடியேட்டர்ஸ்' ஆவணப்படம் வெளியீடு எப்போது? இயக்குநர் ஏ.எல். விஜய் சொன்ன தகவல்!
When will Ajith Gladiators documentary be released Director AL Vijay shares the details
நடிகர் அஜித்குமார் தற்போது சினிமாவுடன் இணைந்து மோட்டார் ரேஸிங்கிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். 'ஏகே ரேசிங்' என்ற அணியை உருவாக்கி சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வரும் அவர், தனது ரேசிங் பயணத்தை மையமாகக் கொண்ட 'கிளாடியேட்டர்ஸ்' என்ற ஆவணப்படத்தையும் உருவாக்கி வருகிறார். இந்த ஆவணப்படத்தின் வெளியீடு குறித்து இயக்குநர் ஏ.எல். விஜய் தற்போது முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.
சினிமாவில் அறிமுகமான காலத்திலிருந்தே கார் பந்தயங்களில் ஆர்வம் கொண்டிருந்த அஜித்குமார், பல போட்டிகளில் பங்கேற்றதுடன், சில விபத்துகளையும் சந்தித்தார். பின்னர் முழு கவனத்தையும் சினிமாவில் செலுத்திய அவர், கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் மோட்டார் ரேஸிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, 'ஏகே ரேசிங்' என்ற அணியை தொடங்கி, உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். சினிமாவில் மட்டுமல்லாமல், மோட்டார் விளையாட்டிலும் தனது தடத்தை பதித்து வருவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த ரேசிங் பயணத்தை பதிவு செய்யும் வகையில் 'கிளாடியேட்டர்ஸ்' என்ற ஆவணப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்க, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் ஏ.எல். விஜய், "'கிளாடியேட்டர்ஸ்' ஆவணப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. அது எப்போது வெளியாகும் என்பதை அஜித் குமாரே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்" என்று தெரிவித்தார்.
மேலும், "இது அஜித்தின் பார்வையும் கனவும். மோட்டார் ரேஸிங் என்பது சாதாரண விளையாட்டு அல்ல. அந்த விளையாட்டை மேலும் பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அஜித் பணியாற்றி வருகிறார். இந்த ஆவணப்படம் வெளியாகும்போது, அஜித்தும் அவரது அணியும் இதற்காக எவ்வளவு உழைத்துள்ளனர் என்பது ரசிகர்களுக்கு புரியும்" என்றும் அவர் கூறினார்.
அஜித்தின் ரேசிங் வாழ்க்கையின் பின்னணியையும், சர்வதேச போட்டிகளுக்கான தயாரிப்புகளையும் வெளிக்கொண்டு வரும் இந்த ஆவணப்படம், ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாத நிலையில், 'கிளாடியேட்டர்ஸ்' குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
English Summary
When will Ajith Gladiators documentary be released Director AL Vijay shares the details