''நாங்க வட்டியும் முதலுமா திருப்பி கொடுக்க காத்திருக்கிறோம்.. சீக்கிரமா வரோம்..; முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்..! - Seithipunal
Seithipunal


''நாங்க வட்டியும் முதலுமா திருப்பி கொடுக்க காத்திருக்கிறோம்.. சீக்கிரமா வரோம்.. திமிர் தனத்துக்கும் ஆணவத்துக்கும் பாடம் புகட்டும் வாய்ப்புதான் இந்த இடைத்தேர்தல்.'' என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து ஒன்றாக கொண்டாடும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ஆம் தேதி திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான முப்பெரும் விழா கடந்த 15-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கட்சியில் சிறப்பாக செயலாற்றிய மூத்த முன்னோடிகளுக்கு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுவார் என்று அறிவிக்கபட்டது. 

விழா நடைபெற இருந்த நேரத்தில் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதால், செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெற இருந்த முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார். இதையடுத்து இன்று செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் திமுக சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது மற்றும் மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்படன. 

இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது;

''75 ஆண்டுகள் ஒரு இயக்கம் நிலைத்து நிற்பது சாதாரணமானது அல்ல. அதே கம்பீரத்துடன் நிலைத்து நிற்கும் இந்தச் சாதனை கழக உடன்பிறப்புகளால்தான் நடந்தது. அவர்களால்தான் நான் வாழ்கிறேன்; அவர்கள் மீதுள்ள நம்பிக்கையில்தான் வாழ்கிறேன். என்னைத் தலைவராக்கிய உடன்பிறப்புகள்தான் முதலமைச்சர் பொறுப்புவரை உயர்த்தி அழகு பார்த்தார்கள். அனைத்து உடன்பிறப்புகளுக்கும் எனது நன்றிகள்.

அறிவியக்கமான தி.மு.கழகம் உதயமான நாள், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவாக முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. கடந்த 15-ஆம் தேதி நடைபெற இருந்த முப்பெரும் விழாவின்போது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவர்கள் இன்னும் சிறிது காலம் ஓய்வெடுக்க அறிவுறுத்தினார்கள். ஆனால், மனசு கேட்கவில்லை. தந்தை பெரியார் பிறந்தநாளில் கலந்துகொண்டு, இன்று முப்பெரும் விழாவிலும் கலந்துகொண்டுள்ளோம். திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று த.வெ.க-விற்கு ஆதரவு தந்த கட்சிகளையும் குதிரை பேரம் நடத்தி இழுத்து வருகிறது.

திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களை நிறுத்துவது, பெயரை மாற்றி ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் தவெக ஆட்சியின் வேலையாக இருக்கிறது. தினமும் சூட்டிங் மோடில்தான் இருக்கிறார் முதலமைச்சர். சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று சொல்லிவிட்டு, இப்போது கேமராமேன் யார் என்று சொல்லாமல் மக்கள் முன்பு நடித்து வருகிறார். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்... பொருளாதாரத்தில் டபுள் டிஜிட் வளர்ச்சி, கல்வியில் சிறந்த தமிழ்நாடு, முதலீட்டாளர்களின் முகவரி தமிழ்நாடு, இந்தியாவில் இல்லாத பல திட்டங்கள் என பேசப்பட்ட தமிழ்நாட்டில், இன்று முதலமைச்சர் ‘கோட்-சூட்டு போட்டாரு, கையால் சாப்பிட்டாரு, காலால் நடந்தாரு, இந்த சைகை செஞ்சாரு’ என்பதுதான் செய்தியாக வருகிறது.

இதையெல்லாம் பார்க்க அருவருப்பாக இருக்கிறது.  முதலில் பஞ்ச் டயலாக், இப்போது வெளிநாட்டு சுற்றுலா. முதலமைச்சரைப் பொறுத்தவரை எல்லாமே ரீல்ஸ்தான். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை முடக்கி, தமிழ்நாட்டை 25 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிவிட்டார்கள். ரீல்ஸ் வெடி வெடித்த ஆளுங்கட்சியினரால், நூற்றாண்டு கால புகழ்பெற்ற சட்டமன்றம் தனது மாண்பை இழந்துள்ளது. 

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் நடந்த கொடுமைகளை எல்லாம் பார்க்கும் போது, கொளத்தூர் மக்களே, கோடானகோடி நன்றி... முதலமைச்சரின் சிரிப்பைப் பார்க்க முடியவில்லை என ஸ்க்ரீன் வைக்கச் சொல்லிக் கேட்கிறார்கள். இதுதான் நாட்டுக்கு தேவையா?

மிசா பற்றி பேசுபவர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். என் மிசா கைதை எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. எனது தியாகத்திற்கு மார்க் போட எவனுக்கும் தகுதி இல்லை. எனது மிசா வரலாற்றை அண்ணன் சிட்டிபாபு சிறையிலேயே பதிவு செய்திருக்கிறார். இது காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டாகும்.

முதலமைச்சரின் தவறுகளையும், குறைகளையும் மக்கள் பேசக்கூடாது என்பதற்காக, அமைச்சரவை முதல் ஊடகங்கள் வரை Diversion Politics செய்கிறார்கள். இன்றைக்கு நாட்டுக்குத் தேவையான அவசியமான செய்தி என்ன தெரியுமா? சி.எம். என்ன கோட் போட்டார்? வெள்ளிக்கிழமை வேட்டி, சட்டை என்ன? நெற்றியில் என்ன கலர் பொட்டு? கையில் உள்ள கயிறு என்ன? என்பதுதான் செய்திகளாக வலம் வருகிறது.

முதலமைச்சர் இதைச் செய்தாலே போதும் என நினைக்கிறார். அவரு பாஷையில் சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் ரெண்டே ரெண்டு பேருக்குத்தான் போட்டி. ஒன்று மின்வெட்டு; இன்னொன்று அறிவாள் வெட்டு. நாங்க வட்டியும் முதலுமா திருப்பி கொடுக்க காத்திருக்கிறோம்.. சீக்கிரமா வரோம்.. திமிர் தனத்துக்கும் ஆணவத்துக்கும் பாடம் புகட்டும் வாய்ப்புதான் இந்த இடைத்தேர்தல் என்று தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We are waiting to pay back the principal along with the interest said MK Stalin at the grand tripartite event


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->