சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்கும் முயற்சி; முதல்வர் விஜய்க்கு CPI வீரபாண்டியன், AMMK டிடிவி தினகரன் கண்டனம்..!
CPIs Veerapandian and AMMKs TTV Dhinakaran condemn the move to privatize Chennai Airport
சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். அதை ஒப்படைப்பது ஏற்புடையதல்ல என விஜய்க்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளதாவது;
''சென்னை விமான நிலையம் ஒரு சாதாரண வணிக நிறுவனம் அல்ல. அது தனிநபர் சொத்தல்ல, மக்களின் பொதுச்சொத்தாகும். நாட்டின் முக்கியமான பொது உள்கட்டமைப்பாகும். தமிழ்நாட்டின் தொழில், வர்த்தகம், சுற்றுலா மற்றும் சரக்கு போக்குவரத்தின் முக்கியமான பங்களிப்பை அது செலுத்துகிறது. நிர்வாக குறைபாடுகள் இருந்தால் அவற்றை சரிசெய்ய வேண்டும். பயணிகள் சேவை, விமான இயக்கம், சரக்கு கையாளுதல், சாலை இணைப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்த வேண்டும். அதைவிடுத்து, விமான நிலையத்தை தனியார்மயமாக்குதல் தீர்வல்ல.
நாடு முழுவதும் விமான நிலையங்களை இயக்குவதன் மூலம் குறிப்பிடத்தக்க வருவாயும் லாபமும் ஈட்டி வருகிறது. 2025-26 நிதியாண்டில் கிகிமி-யின் நிகர லாபம் ரூ.6,522 கோடியாக இருந்ததாக அதன் நிதிநிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படியிருக்க, தனியார் நிர்வாகத்திடம் ஒப்படைப்பது அவசியமற்றது. தமிழக அரசு பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தை திரும்பப் பெற வேண்டும். '' என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
''இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (Airport Authority of India) கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை வேறொரு நிறுவனத்திடமோ அல்லது தனியாரிடமோ மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த அரசுகள், அந்தந்த மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு தாமாக முன்வந்து விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசைக் கோருவது கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள், உட்கட்டமைப்பு மற்றும் பயணிகள் வசதிகளில் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில், அதனை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமே தவிர, பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல.
பொதுமக்களுக்குப் பாதுகாப்பான, தரமான மற்றும் குறைந்த செலவில் சேவைகளை வழங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கும் பட்சத்தில், லாபமே முதன்மை நோக்கமாக மாறும் என்பதோடு, பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்ற விமர்சனமும் பரவலாக எழத் தொடங்கியுள்ளது.
எனவே, சென்னை விமான நிலையத்தைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கோரி மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம் எழுதியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகளில் உண்மை இருக்கும் பட்சத்தில், அத்தகைய முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.'' என்று டிநகரம் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
CPIs Veerapandian and AMMKs TTV Dhinakaran condemn the move to privatize Chennai Airport