விஜய்யின் ‘குதிரை பேர’ சர்ச்சை: தவெக ஆட்சிக்கு மூடு விழா..? திமுக எம்பி பரபரப்பு கருத்து!
TVK Vijay Horse Trading Allegations AMMK TTV Dhinakaran DMK
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் ஒரு த்ரில்லர் திரைப்படம்போல விறுவிறுப்பாக மாறியுள்ளன. 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்ட் (2) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) கட்சிகளின் ஆதரவுடன் 117 இடங்களைப் பெற்றுள்ளது.
பெரும்பான்மைக்கு இன்னும் ஒரு இடம் மட்டுமே தேவைப்படும் நிலையில், தவெக தலைவர் விஜய் ஆளுநர் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது மாநில அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்தச் சூழலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்வைத்துள்ள ‘குதிரை பேர’ குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
தங்களது கட்சியின் ஒரே ஒரு எம்எல்ஏவான காமராஜைக் காணவில்லை என்றும், அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் நள்ளிரவில் அவர் ஆளுநர் மாளிகையில் புகார் அளித்தார். தவெகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டு தங்களது எம்எல்ஏவை இழுக்க முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
நள்ளிரவு 12 மணியளவில் ஆளுநர் மாளிகைக்கு வந்த எம்எல்ஏ காமராஜ், தான் புதுச்சேரியில் இருந்ததாகவும், ஆளுநர் மாளிகையிலிருந்து அழைப்பு வந்ததால் நேரில் வந்ததாகவும் விளக்கமளித்தார்.
குறிப்பாக, “தான் தவெக-விற்கு ஆதரவு தெரிவித்து வாட்ஸ்அப்பில் கடிதம் அனுப்பியதாகக் கூறப்படும் தகவல் தவறு; நான் பயன்படுத்துவதோ வாட்ஸ்அப் வசதியே இல்லாத சாதாரண மொபைல்” என்று அவர் கூறியது ஒரு சுவாரஸ்யமான திருப்பமாக அமைந்தது. பின்னர் அவர் தனது கைப்படக் கடிதம் எழுதி, தான் தவெக-விற்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
இந்த விவகாரத்தை முன்வைத்து திமுக எம்பி வில்சன் கடுமையாக விமர்சித்துள்ளார். “தமிழகத்தில் ‘மாற்றம்’ கொண்டு வரப்போவதாகச் சொன்னவர்கள், பதவியேற்பதற்கு முன்பே குதிரை பேர முயற்சிகளில் இறங்கியுள்ளது வேதனைக்குரியது” என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத இத்தகைய ‘நள்ளிரவு அரசியல்’ மற்றும் ‘குதிரை பேர’ புகார்கள், புதிய ஆட்சி அமையவிருக்கும் வேளையில் ஒருவித பதற்றமான சூழலையே உருவாக்கியுள்ளன.
மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்தாலும், தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பது சந்தேகம் தான். அமமுக எம் எல் ஏ காமராஜ் அளித்திருக்கும் புகார் மீது ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிடவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் விஜய் ஆட்சி அமைக்க வாய்ப்பு குறைவு என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
TVK Vijay Horse Trading Allegations AMMK TTV Dhinakaran DMK