இனி வரும் ஒவ்வொரு தேர்தலிலும் திமுக 100 சதவிகிதம் துடைத்தெறியப்படுவது உறுதி - ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing Fires Back at MK Stalin Over MGR Legacy and Government Lifespan Remarks
சென்னை வானகரத்தில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் இணையும் விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக அரசு இன்னும் 3 அல்லது 6 மாதங்கள் மட்டுமே நீடிக்கும் என்றும், எந்நேரத்திலும் தேர்தல் வரலாம் என்பதால் திமுகவினர் தயாராக இருக்க வேண்டும் என்றும் பேசியிருந்தார். மேலும், எம்.ஜி.ஆர் முதலில் உதயசூரியன் சின்னத்தில் நின்றுதான் எம்.எல்.ஏ ஆனார் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தவெக தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் மிகக் கடுமையான விமரிசனப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
எம்.ஜி.ஆர் வரலாறு குறித்துப் பதிலடி
மு.க.ஸ்டாலினை "கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ" என்று குறிப்பிட்டுள்ள தவெக ஐடி விங், "எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்துதான் முதன்முதலில் எம்.எல்.ஏ ஆனார் என்று பெருமை பேசும் ஸ்டாலின் சார், தன் வாழ்நாள் எதிரியே திமுகதான் என்று கடைசி வரை வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர் என்ற உண்மையைச் சொல்வாரா? திமுகவை ஒரு 'தீயசக்தி' என்று பகிரங்கமாக அறிவித்து, தான் உயிரோடு இருக்கும் வரை திமுகவை ஆட்சிக்கட்டிலில் ஏறவிடாமல் முடக்கி வைத்தவர் எம்.ஜி.ஆர். அவர் அமெரிக்கா சென்றிருந்தபோது, தற்காலிகமாக ஆட்சியைத் தன்னிடம் தருமாறு திமுகவை கெஞ்ச வைத்ததும் இதே எம்.ஜி.ஆர் தான்" என்று வரலாற்றைச் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்தகால நிர்வாகம் மீதான சாடல்
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைக்கு ஸ்டாலினின் கடந்தகால நிர்வாகமே அடித்தளம் இட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள தவெக, "சட்டம் ஒழுங்கு டிஜிபியைக் (DGP) கூட முறையாக நியமிக்காமல் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கையே சந்தி சிரிக்க வைத்தவர் ஸ்டாலின் தான். ஆனால், இன்று ஏதோ தன்னால் தமிழகம் பாழ்படவே இல்லை என்பதுபோலப் பேசி அவர் தனது நகைச்சுவைத் திறனைக் காட்டுகிறார்" என்று சாடியுள்ளது.
விரக்தியின் வெளிப்பாடு
தவெக அரசு இன்னும் சில மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்ற ஸ்டாலினின் கூற்றைப் பொறாமை மற்றும் விரக்தியின் வெளிப்பாடு என்று தவெக ஐடி விங் விமரிசித்துள்ளது. "ஆட்சி அதிகாரத்தை இழந்த விரக்தியில் மக்கள் தீர்ப்பை அவமதித்து ஸ்டாலின் சார் பேசுகிறார். அவர் எவ்வளவுதான் ஆலாய்ப் பறந்தாலும், இனி வரவிருக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் திமுக 100 சதவிகிதம் மக்களால் முற்றிலும் துடைத்தெறியப்படுவது உறுதி" என்று தவெக தனது பதிவில் மிக ஆக்ரோஷமாகத் தெரிவித்துள்ளது.
English Summary
TVK IT Wing Fires Back at MK Stalin Over MGR Legacy and Government Lifespan Remarks