மும்பையை உலுக்கிய சம்பவம்; ''மொஹரம் ஊர்வலத்தில் 15,000 பேரைக் கொல்ல திட்டமிட்டேன்''; விஷ மாத்திரைகளுடன் கைதான நபர் பகீர் தகவல்; பின்னணியில் தீவிரவாத தொடர்பா..?
Man arrested with poison pills allegedly planning to kill 15000 people during Muharram procession in Mumbai
நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இஸ்லாமியர்களின் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் மொஹரம் பண்டிகை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மும்பையில் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ரே ரோடு பகுதியில் உள்ள ரஹ்மதாபாத் மயானத்துக்கு அருகில் நடைபெற்ற ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு, ஒருவர் மாத்திரையை (கேப்சூல்) விநியோகித்துள்ளார்.
இவர் கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக் கொண்டு, அந்த மாத்திரைகளை வலி நிவாரணி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் என்று கூறி கூட்டத்தில் கொடுத்துள்ளார்.
ஆனால், இதனை பார்த்து சந்தேகமடைந்த ஒரு பெண் போலீஸில் புகார் செய்துள்ளார். புகாரையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீஸார் மாத்திரைகளை விநியோகித்த பயாஸ் பிரேம்ஜி என்பவரை கைது செய்தனர்.

பின்னர் அவரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சூழலில், இந்த மாத்திரைகளை வாங்கி உட்கொண்ட 11 பேர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துரிதமாக செயல்பட்டதால் தற்போது அவர்கள் அனைவரும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து மும்பை மாநகர காவல் துணை ஆணையர் ஜெயந்த் மீனா தெரிவித்துள்ளதாவது;
"புகாரின் பேரில் மாத்திரைகளை விநியோகித்த பயாஸை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 14,900 மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர். அந்த மாத்திரைகளில் எலி விஷம் மற்றும் பிற பூச்சிக்கொல்லிகளில் பயன்படுத்தப்படும் ‘ஜின்க் பாஸ்பைடு' என்ற மிக ஆபத்தான வேதிப்பொருள் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது'' என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்த நபர் 30,000 வெற்று கேப்சூல்களையும், 50 கிலோ பாஸ்பரஸையும் ஆர்டர் செய்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், ஊர்வலத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்வதே தனது நோக்கம் என்று விசாரணையின்போது பயாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக மும்பை மாநகர காவல் துணை ஆணையர் ஜெயந்த் மீனா தெரிவித்துள்ளார்.
பிபிஏ பட்டதாரியான இந்த நபர் அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், குறிப்பாக, அவர் இதற்கு முன்பு ஈரான் மற்றும் இராக் நாடுகளுக்குச் சென்று வந்துள்ளதாக தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, பயாஸ் மீது பைகுல்லா காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 123-இன் கீழ் (குற்றம் செய்யும் நோக்கத்துடன் விஷம் போன்றவற்றால் காயம் ஏற்படுத்துதல்) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சதியின் பின்னணியில் ஏதேனும் தீவிரவாதத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக மும்பை மாநகர காவல் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
English Summary
Man arrested with poison pills allegedly planning to kill 15000 people during Muharram procession in Mumbai