முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு... அப்செட்டில் அமைச்சர்கள்...! அப்படி என்ன '6 மாத' தடை தெரியுமா...?
Chief Minister drastic order Ministers upset Do you know what 6 month ban
தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபைத் தேர்தலில் வரலாற்றுச் சாதனை படைத்து த.வெ.க. ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கட்சித் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று புதிய அரசை வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையிலான அமைச்சரவையில் த.வெ.க. சார்பில் 30 பேரும், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 4 பேரும் இடம்பிடித்துள்ளனர்.
இந்த சூழலில், மாநிலத்தின் பொருளாதார நிலவரத்தை வெளிச்சமிட்டு காட்டும் வெள்ளை அறிக்கை கடந்த 15-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்துறையின் செயல்பாடுகள் மற்றும் நிதிசார் நிலைமைகளை விளக்கும் வெள்ளை அறிக்கையும் 25-ஆம் தேதி வெளியானது. இதில் முந்தைய ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட நிர்வாக சீர்கேடுகள் மற்றும் பெருமளவிலான நிதி இழப்புகள் குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே வெளிப்படைத்தன்மை, நேர்மை, ஊழலற்ற நிர்வாகம் என்பதையே த.வெ.க. அரசு தனது அடிப்படை கொள்கையாக முன்னிறுத்தி வருகிறது. அதேசமயம், முந்தைய ஆட்சியில் நிகழ்ந்ததாக கூறப்படும் முறைகேடுகளின் ஆதாரங்களையும் தீவிரமாக திரட்டும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
த.வெ.க. அமைச்சரவையில் கே.ஏ. செங்கோட்டையனைத் தவிர பெரும்பாலானோர் அரசியல் நிர்வாகத்தில் புதிய முகங்கள். முதலமைச்சர் விஜயும் முதன்முறையாக நிர்வாக பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், எந்த நிலையிலும் தவறுகள் நிகழக்கூடாது என்பதில் அவர் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னர் தமிழக அரசியலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. மாறி மாறி ஆட்சியிலும் எதிர்க்கட்சியிலும் இருந்தன. ஆனால் தற்போது த.வெ.க. ஆட்சியில் இருக்கும் நிலையில், இரு பெரிய கட்சிகளும் எதிர்க்கட்சிகளாக செயல்படுகின்றன.இதனால் அமைச்சர்களின் ஒவ்வொரு முடிவும், ஒவ்வொரு நடவடிக்கையும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. சிறிய தவறும் பெரிய சர்ச்சையாக மாறும் சூழல் இருப்பதால், அமைச்சர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என முதலமைச்சர் விஜய் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், த.வெ.க. அமைச்சரவையில் உள்ள சில முக்கிய முகங்களை தங்கள் பக்கம் இழுக்க எதிர்க்கட்சிகள் மறைமுக முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தகவல்கள் உண்மையாக இருந்தால், ஆட்சியின் நிலைத்தன்மைக்கு சவால் உருவாகும் அபாயமும் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அமைச்சர்களுக்கு விஜய் விதித்த கட்டுப்பாடு
இந்த அரசியல் பரபரப்புகளுக்கிடையே, அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, அடுத்த 6 மாதங்களுக்கு அன்றாட நிர்வாக செலவுகள் மற்றும் அவசர கோப்புகளைத் தவிர, புதிய திட்டங்கள் அல்லது புதிய ஒப்பந்தங்கள் தொடர்பான கோப்புகளில் அமைச்சர்கள் யாரும் கையெழுத்திடக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காரணம், முந்தைய ஆட்சிக்காலத்தில் முறைகேடுகளில் சிக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்த சில ஒப்பந்ததாரர்கள், புதிய அரசையும் அணுக முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்களுக்கு அறியாமலோ அல்லது அழுத்தத்தாலோ புதிய ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டால், அது அரசுக்கு கடுமையான சிக்கலை உருவாக்கக்கூடும் என்ற அச்சமே இந்த முடிவுக்குப் பின்னணி என தெரிவிக்கப்படுகிறது.புதிய அரசு எடுக்கும் அடுத்தடுத்த நகர்வுகள் தமிழக அரசியலில் எந்த மாற்றத்தை உருவாக்கப்போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Chief Minister drastic order Ministers upset Do you know what 6 month ban