2026 தேர்தலில் எதிர்வினை இருக்கும்! திமுக அரசுக்கு எச்சரிக்கை மணி அடித்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்!
TN Govt Staffs Sangam warn to DMK Govt Mk Stalin Election 2026
தமிழக அரசால் கைதாகி பாதிக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களின் அறச்சீற்றம், வரும் சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இது குறித்த அதன் அறிக்கையில், ”அகிம்சை வழியில் ஜனநாயக முறைப்படி, அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்கு அளித்திருக்கும் உரிமைகளின் அடிப்படையில் போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களை நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் இரவோடு, இரவாக குண்டுக்கட்டாக தூக்கியெறிந்து, வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்துள்ள ஆட்சியாளர்களின் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
"அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை"- (குறள் 555) என்ற குறளில், ஆட்சியாளர்களின் கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக் கருவியாக மாறும் என்பதற்கேற்ப, பாதிக்கப்பட்டு நிற்கும் தூய்மைப் பணியாளர்களின் அறச்சீற்றம் 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்.
உங்களுடன் ஸ்டாலின், நலன் காக்கும் ஸ்டாலின், தாயுமானவன் என தலைப்புகளில் இருக்கும் நயமும், நளினமும் ஆளும் திமுக அரசின் நடவடிக்கையில் இல்லை என்பதை நினைக்கும்போது மனம் வேதனையுறுகிறது. தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் களம் காணத் துவங்கியுள்ளனர். அடுத்தடுத்து தொழிலாளர் வர்க்கமும், பாட்டாளி வர்க்கமும் போராட்டக் களம் காணத் தயாராக உள்ளனர்.
மத்திய அரசின் வேளாண்மைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஓராண்டாக விவசாயிகள் போராடும்போது கூட மத்திய அரசு இதுபோன்ற வழக்குகளைத் தொடுத்து விவசாயிகளை ஒடுக்க முற்படவில்லை. ஆனால், தமிழகத்தில் அதிமுக, திமுக அரசு போராட்டங்கள் பெரிய அளவில் முன்னெடுக்கும் போதெல்லாம் தேன்மொழி, கனிமொழி, ரமேஷ் என சமூக செயல்பாட்டாளர் என்ற பெயரில் யாராவது ஒருவரை வைத்து பொது நல வழக்கென்ற போர்வையில் போராட்டங்களை ஒடுக்க ஆட்சியாளர்களே வழக்கு தொடுத்து, போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியை மேற்கொள்வதை மக்கள் அறிந்துள்ளனர்.
நேர்மையான வழியில் தங்களின் உரிமைக்காகப் போராடும் மக்களை, மாக்களாக நடத்த நினைக்கும் ஆட்சியர்களுக்கு பாதிக்கப்பட்டு நிற்கும் தூய்மைப் பணியாளர்களின் அறச்சீற்றம் ஆட்சிக்கு எதிரான மக்கள் மனோநிலையின் துவக்கப் புள்ளி, எச்சரிக்கை மணி என்பதை ஆட்சியாளர் கள் சற்றே கவனத்தில் கொண்டு செயல்பட்டால் நல்லது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TN Govt Staffs Sangam warn to DMK Govt Mk Stalin Election 2026