2026 ஆம் ஆண்டுக்கான குறளாசிரியர் மாநாடு; ஆசிரியர்கள் அரசு அலுவலர்களுக்கு தமிழக அரசு அழைப்பு..!
The Tamil Nadu government has invited teachers and government officials to the Thirukkural Conference in 2026
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் குறளாசிரியர் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
''தமிழ்நாடு முதல்-அமைச்சரால் 31.12.2024-ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளிவிழா நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் குறள் வாரம் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட அறிவிப்பினை செயல்படுத்திடும் பொருட்டு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குறள்வார விழா கொண்டாடிட ஆணையிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், திருப்பூர் மாவட்ட நிருவாக ஒருங்கிணைப்பில், மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டி மற்று குறளாசிரியர் மாநாடு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் 21.01.2026 புதன் கிழமை நடைபெறவுள்ளது.

திருப்பூரில் நடைபெறவுள்ள குறளாசிரியர் மாநாடு மற்றும் மாநில அளவிலான குறள் வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு சென்னை மாவட்ட நிருவாக ஒருங்கிணைப்பில் தமிழ் வளர்ச்சித் துறையுடன் இணைந்து மாவட்ட அளவிலான முதல்நிலைத் தேர்வு சென்னை சேத்துப்பட்டு ஆரிங்டன் சாலையில் உள்ள கிருத்துவக் கல்லூரி மேனிலைப் பள்ளியில் எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணிவரை நடைபெற உள்ளது.
சென்னை மாவட்டத்தில் பணிபுரியும் அரசு மற்றும் அரசுசார் நிறுவன அலுவலர்கள்/பணியாளர்கள் (அனைத்து நிலைகளிலும்) மற்றும் ஆசிரியர்கள் (அனைத்து நிலைகளிலும்) முதல்நிலைத் தேர்வில் (கொள்குறி முறை) பங்குபெறும் வகையில், இதனுடன் இணைக்கப்பட்டுள்ள விரைவுத் துலங்கல் குறியீட்டின் மூலம் பதிவு செய்யப்பெறலாம்.
முன்பதிவு செய்யமுடியாத நேர்வில், போட்டி நடைபெறும் தேர்வு மையத்திற்கு அடையாள அட்டையுடன் நேரடியாகச் சென்று பங்கேற்கலாம். இந்த முதல்நிலைத் தேர்வுக்கு அனைவரும் பிற்பகல் 1 மணிக்கு முன்பாக தேர்வு மையத்திற்கு அடையாள அட்டையுடன் வருகைபுரிய வேண்டும்.

இத்தேர்வில் முதல் மதிப்பெண்களைப் பெறும் 30 நபர்கள் (ஆசிரியர்கள் 15 நபர் + அரசு அலுவலர்கள் 15 நபர்) திருப்பூர் மாவட்டத்தில் 21-01-2026 புதன்கிழமையன்று அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறும் மாநில அளவிலான வினாடி வினா போட்டி மற்றும் குறளாசிரியர் மாநாட்டில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பினைப்பெறுவர்.
திருப்பூர் மாவட்ட நிகழ்ச்சிக்குத் தெரிவு செய்யப்பெறும் 30 நபர்களில் முதல் மதிப்பெண் அடிப்படையில் தெரிவு செய்யப்பெறும் 9 நபர்கள் 3 குழுவாகத் திருப்பூரில் நடைபெறும் வினாடி வினாப் போட்டியில் பங்குபெறுவர்.
வினாடி வினாவின் இறுதிப்போட்டியில் முதல் இடம் பெறும் அணிக்கு ரூ.1,50,000/- இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூ.1,20,000/- மூன்றாம் இடம்பெறும் அணிக்கு ரூ.90,000/- பரிசாக வழங்கப்படும். போட்டியில் பங்கு பெற்ற மீதமுள்ள 3 அணிகளுக்கு ஊக்க பரிசாக ரூ.15,000/- வழங்கப்படும்.
குறள் வினாடி வினாவுக்கான பாடத்திட்டங்கள் விதிமுறைகள் பற்றி அறியவும் போட்டியில் கலந்துகொள்ள பதிவு செய்வதற்கும் பின்வரும் விரைவுத்துலங்கள் குறியீடுகளைப் பயன்படுத்தவும். '' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary
The Tamil Nadu government has invited teachers and government officials to the Thirukkural Conference in 2026