சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! விமர்சனத்துக்குள்ளாகும் முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி!
So many Tamil errors in the Singappenn Special Task Force AI video Chief Minister Vijay first official event faces criticism
தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் விஜய் பங்கேற்ற முதல் அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சியிலேயே இடம்பெற்ற தமிழ் எழுத்துப் பிழைகள் தற்போது சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ திட்டத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. ரூ.354 கோடி மதிப்பீட்டில், 2,500 புதிய பணியிடங்களுடன் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சியில், அரசுத் தரப்பில் தயாரிக்கப்பட்ட ஏஐ தொழில்நுட்ப அடிப்படையிலான விளக்க வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது.
ஆனால், அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த பல தமிழ் வார்த்தைகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்ததாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, தமிழக அரசின் இலச்சினையில் இடம்பெறும் “தமிழ்நாடு அரசு” மற்றும் “வாய்மையே வெல்லும்” போன்ற வாசகங்களில்கூட பிழைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், “ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம்” உள்ளிட்ட சில வார்த்தைகளும் தவறாக இடம்பெற்றதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதையடுத்து, முதலமைச்சர் பங்கேற்ற முதல் அரசு விழாவிலேயே இத்தகைய தவறுகள் நிகழ்ந்தது எப்படி என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன. அரசின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட வீடியோ முறையாக ஆய்வு செய்யப்படாமல் வெளியிடப்பட்டதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட உள்ளடக்கங்களை மனிதர்கள் சரிபார்க்காமல் பயன்படுத்தியதே இந்த தவறுகளுக்கு காரணமாக இருக்கலாம் என தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது என்றாலும், குறிப்பாக அரசு நிகழ்ச்சிகளில் மொழித் துல்லியத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், சம்பந்தப்பட்ட வீடியோ குறித்து அரசு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. இருப்பினும், தமிழ்மொழி பயன்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலிருந்தும் வலுத்து வருகிறது.
English Summary
So many Tamil errors in the Singappenn Special Task Force AI video Chief Minister Vijay first official event faces criticism