மானத்தை, ரோஷத்தை இழந்து காலில் விழமாட்டோம்! மதுரையில் எகிறிய செல்லூர் ராஜூ!
SellurRaju has said we not fall down on feet for alliance
மதுரை மாவட்ட பாஜக துணை தலைவர் ஜெயவேலு தலைமையிலான அக்கட்சியினர் இன்று பாஜகவில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் மதுரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் சாதன தர்மம் குறித்து பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர் "வரலாறு தெரியாமல் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கிறார். சனாதனம் என்பது பேரறிஞர் அண்ணா காலத்திலேயே ஒழிக்கப்பட்டுவிட்டது. அதிமுகவில் இஸ்லாமியர் ஒருவரை அவைத் தலைவராக ஈபிஎஸ் அவர்கள் அமர்த்தியிருக்கிறார். இதேபோல திமுகவில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு திமுகவில் தலைமை பதவியை அவர்கள் கொடுப்பார்களா?

உதயநிதி இதற்கு பதில் சொல்வாரா? தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி அதை 9வது அட்டவணையில் கொண்டுவந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஒரு பிராமணராக இருந்துக்கொண்டு அவர் இவ்வாறு செய்தார். சத்துணவு திட்டம் கொண்டுவந்து அனைத்து சமூக பள்ளிக் குழந்தைகளையும் சமமாக அமர வைத்து உண்ண வைத்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் தான் மசூதிக்குள் காவல்துறையினர் பூட்ஸ் காலுடன் உள்ளே சென்று, கைலி கட்டிய தீவிரவாதி இருப்பதாக சொன்னார்கள். அதெல்லாம் தெரியாமல் உதயநிதி பேசுகிறார். அவர் நடிகராக இருந்தவர். புது புது நடிகர்களுடன் கூட இருந்தவர். தேர்தலுக்கு முன்பு திமுகவில் உழைத்தவர்கள் தியாகம் பண்ணவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். நான் எப்படி அந்த கட்சியில் சேர்ந்து பதவி அனுபவிக்க முடியும் என பேசி இருந்தார்.

தற்போதைய முதலமைச்சர் அவருடைய அப்பா கருணாநிதி சொன்னது போல இது என்ன சங்கர மடமா என பேசி இருந்தார். எனக்கு பிறகு என் மகனோ, மருமகனோ கட்சிக்கு வரமாட்டார்கள் என்று சொன்னவர் ஸ்டாலின். இப்போது எப்படி பதவிக்கு உதயநிதி வந்தார்? மகளிருக்கான 1,000 கொடுத்தது இவர்களுக்கு எதிரான எதிர்ப்பு அலையை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவில் மூத்த அமைச்சர்கள் கூட உதயநிதி ஸ்டாலின் காலில் விழ தயாராக இருக்கிறார்கள். மானத்தை இழந்து, மதிப்பை இழந்து கூட்டணிக்காக யார் பின்னாலும், யார் காலியிலும் நாங்கள் விடமாட்டோம். பாஜகவுக்கும், எங்களுக்கும் ஏதாவது பிரச்சனை என்று நாங்கள் யாராவது பேசினோமா? அண்ணாமலை பேசிய கருத்துக்கள் தவறு, ஜெயலலிதாவை பற்றி முதலில் பேசினார், பின்னர் அண்ணாவை பற்றி பேசியுள்ளார். திமுக ஆட்சியை பற்றி விமர்சிக்கலாம்.

இடதுசாரிகள் கொள்கையை அடமானம் வைத்திருக்கிறார்கள், அதை பற்றி பேசியிருக்கலாமே? தேவர் ஐயாவை தெய்வமாக வணங்கும் ஒரு கட்சி இருக்கு எனில் அது அதிமுக மட்டும் தான். எங்கள் கொள்கையே அண்ணாயிசம் தான். அப்படியிருக்க அண்ணா பற்றி இவர் இப்போது பேசுவது முறையல்ல. நட்டா ஜி, அமித்ஷா ஜி, பிரதமர் மோடி ஆகியோர் எங்கள் பொதுச்செயலாளரை மதித்து, அவருடன் நட்போடு பழகுகிறார்கள்.
கூட்டணி நிலைபாடுகள் குறித்து எங்கள் தலைமை ஏற்கனவே சொல்லிவிட்டது. அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்றெல்லாம் நாங்கள் சொல்லவில்லை. அது இன்னொரு கட்சியின் உட்கட்சி பிரச்சனை. அதில் தலையிட நாங்கள் விரும்பவில்லை. கூட்டணியில் இருந்துக்கொண்டு, எங்கள் கட்சித் தலைவரை விமர்சிப்பது சரியல்ல. இன்றைக்கும் சொல்கிறோம். மோடி பிரதமராக வரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதேபோல தமிழக முதல்வராக எடப்பாடியார் வரவேண்டும். பாஜகவும் இதை அறிவிக்க வேண்டும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.
English Summary
SellurRaju has said we not fall down on feet for alliance