'மதமும் ஜாதிய உணர்ச்சியும் தான் அரசியலை தீர்மானிக்கிறது'; இந்தியா முழுவதும் இதே நிலைமைதான் என்கிறார் சீமான்..!
Seeman says religion and caste sentiments determine politics
''ஜாதியும், மதமும் தான் இங்கு அரசியல் செய்கிறது. இந்தியா முழுவதும் இதே நிலைமைதான்''என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நெல்லையில் காதல் விவகாரத்தில் ஆணவக் படுகொலை செய்யப்பட்ட இளைஞர் கவின் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சீமான் பதிலளித்துள்ளதாவது:
படித்த பிள்ளைகளிடம் இப்படி ஒரு உணர்வு இருக்கிறது. கல்வி வந்து அறிவை போதிக்க வில்லை. அறத்தை போதிக்கவில்லை, வாழ்க்கை நெறியை போதிக்கவில்லை. கல்வி வியாபாரம் ஆனதால், அந்த சிந்தனை அப்படியே இருக்கிறது, மறைக்கப்பட வில்லை என்று கூறியுள்ளார்.
அத்துடன், படித்தவர்கள் எல்லாம் அதனை கடந்து வருவார்கள் என்று சொல்வார்கள். ஆனால், ஜாதி, மத உணர்ச்சி கடந்து, பேரன்பு கொண்டவனாக வருவான் என்பதற்கு புராணங்கள், தத்துவங்கள் எல்லாம் உருவாக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதைவிட கொடுமை பள்ளி மாணவர்கள் ஜாதி வெறியுடன் வெட்டி கொண்டது, அதே நிலத்தில் நடந்தது தானே? பிஞ்சு நெஞ்சுக்குள் நஞ்சு விதை விதைக்கப்படுகிறது என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், ஜாதியும், மதமும் தான் இங்கு அரசியல் செய்கிறது என்றும், இந்தியா முழுவதும் இதே நிலைமைதான் என்று வருத்தம் தெரிவித்துள்ளார். நாட்டின் உள்துறை அமைச்சர் மதுரையில் பேசும்போது ஹிந்து மக்களின் ஒற்றுமை என்று பேசுகிறார். இந்திய மக்களின் ஒற்றுமை என்று பேசி இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஒரு குறிப்பிட்ட சமயம், மதம் சார்ந்தவர்கள் மீது வெறுப்பை கொட்டுவதை தங்களது அரசியல் என்று இருந்தால், அது எப்படி நாடு சரியாக இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆக, இங்கு மதமும் ஜாதிய உணர்ச்சியும் தான் அரசியலை தீர்மானிக்கிறது. என்று நிருபர்களிடம் சீமான் கூறியுள்ளார்.
English Summary
Seeman says religion and caste sentiments determine politics