சமூகநீதியைக் கேலிக் கூத்தாக்கக் கூடாது! இல்லாத ஆணையம், திரட்டாத தரவுகளுக்கு எதற்காக மேலும் ஓராண்டு கால நீட்டிப்பு? அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடு   கடந்த ஜூலை 11 ஆம் நாளுடன் நிறைவடைந்து விட்ட நிலையில், அக்காலக்கெடுவை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசு ஆணையிட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் முடிவடையவுள்ள நிலையில், அதையும் தாண்டி காலநீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பது கேலிக்கூத்து ஆகும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும், உரியதரவுகளைத்  திரட்டி அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2022&ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31&ஆம் நாள் ஆணையிட்டது.

அதன்பின் 10 மாதங்கள் கழித்து தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைக்கும்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு 2023&ஆம் ஆண்டு ஜனவரி 12&ஆம் நாள் தமிழக அரசு ஆணையிட்டது. 3 மாதங்களுக்குள் இதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழக அரசு ஆணையிட்டிருந்த நிலையில், கடந்த ஜூலை 11&ஆம் தேதியுடன் 30 மாதங்கள் முடிவடைந்த பிறகும், இன்று வரை இடைக்கால அறிக்கையைக் கூட ஆணையம் தாக்கல் செய்யவில்லை.

3 மாதங்களில் முடிக்க வேண்டிய பணியை 30 மாதங்கள் ஆகியும் முடிக்காத தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், தங்களுக்கு வழங்கப்பட்ட கடமையை நிறைவேற்ற மேலும் ஓராண்டு காலக்கெடு வழங்க வேண்டும்  என்று கோரிக்கை விடுத்த நிலையில், அதை உடனே செயல்படுத்தியிருக்கிறது தமிழக அரசு. அதன்படி வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரை அளிப்பதற்கான காலக்கெடு 2026&ஆம் ஆண்டு ஜூலை 11&ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது தான் மிகப்பெரிய கேலிக்கூத்து ஆகும்.

தமிழ்நாட்டில் இப்போது பொறுப்பில் உள்ள நீதியரசர் பாரதிதாசன் தலைமையிலான தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் ஆணையம் கடந்த 2022&ஆம் ஆண்டு நவம்பர் 17&ஆம் நாள் அமைக்கப்பட்டது. அதன் மூன்றாண்டு பதவிக்காலம் வரும் நவம்பர் 16&ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின் யார் தலைமையில், எப்போது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்படும் என்பது தெரியவில்லை. புதிதாக அமைக்கப்படும் ஆணையத்தில் இப்போதுள்ள தலைவரோ, உறுப்பினர்களோ இருப்பார்களா? என்பது தெரியவில்லை. இத்தகைய சூழலில் அந்த ஆணையத்திற்கு வழங்கப்படும் காலநீட்டிப்பு எந்த வகையில் சரியாக இருக்கும்; எந்த வகையில் செல்லும்?

ஓராண்டு கால நீட்டிப்புக் கோரி தமிழ்நாடு அரசுக்கு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 08.07.2025&ஆம் நாள் அனுப்பிய கடிதத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இடம் பெற்றுள்ள எந்த ஒரு சமூகம் குறித்த மதிப்பிடக்கூடிய தரவுகள் எதுவும் தங்களிடம் இல்லாததால் தான் வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த பரிந்துரை  அறிக்கையை வழங்க முடியவில்லை என்றும், அதனால் அந்த அறிக்கையை தயாரித்து வழங்க ஓராண்டு கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார். இது மிகப்பெரிய ஏமாற்று வேலையாகும். இது தொடர்பாக எழும் ஐயங்களைத் தீர்க்க கீழ்க்கண்ட வினாக்களுக்கு அரசும், ஆணையமும் பதிலளிக்க வேண்டும்.

1. வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்கத் தேவையான தரவுகள் தங்களிடம் இல்லை என்று கடந்த 30 மாதங்களில் இப்போது தான் ஆணையம் முதல்முறையாக கூறியிருக்கிறது. கடந்த 30 மாதங்களாக இந்த உண்மையை பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வெளியில் சொல்லாதது ஏன்?

2. வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்குத் தேவையான தரவுகள் ஆணையத்திடம் இல்லாத நிலையில், அவற்றை அரசுத்துறைகள், தேர்வாணையங்களிடமிருந்து கேட்டுப் பெற ஆணையம் முயற்சி செய்ததா? ஆம் என்றால், அதற்கு தமிழக அரசிடமிருந்து கிடைத்த பதில் என்ன?

3. வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்குத் தேவையான தரவுகளைத் திரட்ட தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று வரை அந்த அதிகாரத்தை பயன்படுத்தாதது ஏன்?

4. ஓராண்டு காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த காலத்தில் வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு தேவையான தரவுகளை பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எவ்வாறு திரட்டப் போகிறது? கடந்த 30 மாதங்களில் கிடைக்காத அதிகாரமும், உரிமைகளும் அடுத்த ஓராண்டில் ஆணையத்திற்கு எப்படி கிடைக்கும்?

5. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்குத் தேவையான தரவுகள் இல்லை என்று ஆணையம் கூறும் நிலையில், கல்வி & வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5%க்கும் கூடுதலான பிரதிநிதித்துவம் கிடைத்திருப்பதாக தமிழ்நாடு அரசு எந்த அடிப்படையில் தெரிவித்தது?

இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு 1993&ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தான் நிலையான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்பின் 2007&ஆம்  ஆண்டில் இஸ்லாமியர் உள் இட ஒதுக்கீடும், 2008&ஆம் ஆண்டில் அருந்ததியர் உள் இட ஒதுக்கீடும் வழங்கப் பட்டன. இதற்கான பரிந்துரைகளை வழங்கும் பணி அப்போது இருந்த நீதியரசர் ஜனார்த்தனம் தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்ட போது, அந்த ஆணையத்தின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே பரிந்துரை அறிக்கைகள் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், தமிழக வரலாற்றில் முதன்முறையாக நீதியரசர் பாரதிதாசன் தலைமையிலான ஆணையம் தான் அதற்கு கொடுக்கப்பட்ட பணியை பதவிக்காலம் முடியும் வரை நிறைவேற்றவில்லை. இது குறித்து ஆணையத்திடம்  அரசு ஒருமுறை கூட விளக்கம் கேட்கவில்லை. ஆணையமும் இந்த சிக்கலில் தமிழக அரசின் துரோகங்களைத் தட்டிக் கேட்கவில்லை. காரணம், வன்மத்தின் அடிப்படையில் இரு அமைப்புகளும் வன்னியர்களுக்கு எதிராக அமைத்திருக்கும் கூட்டணி தான்.

தமிழ்நாடு அரசு, பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆகிய இரு அமைப்புகளின் முதன்மைப் பணியே மக்களுக்கு  சமூகநீதி வழங்குவது தான். அந்தக் கடமையை செய்யாமல் சமூகநீதியைக் கேலிக்கூத்தாக்கும் செயல்களில் இரு அமைப்புகளும் ஈடுபடக்கூடாது. எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து  பரிந்துரை அறிக்கையைப் பெற்று வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்டமியற்ற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin MBC Reservation


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->