2 மீட்டிங் தான்.. கேஸ் விலை ₹200 குறைந்தது! இதுதான் இந்தியாவின் சக்தி!
Rs200 gas cylinder price reduced due to India alliance 2 meeting
இந்தியா முழுவதும் அனைத்து விதமான வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையை 200 ரூபாய் வரை குறைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் நடுத்தர குடும்பங்களின் பெண்களுக்கு நிவாரணம் அளிக்கும் வலையில் மத்திய அமைச்சரவை இந்த முடிவினை எடுத்துள்ளது.
அதன்படி நாடு முழுவதும் அனைத்து வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயனாளர்களுக்கும் 200 மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் வாங்கும் பயனாளர்களுக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படுவதால் தற்பொழுது அந்த மானியம் 400 ரூபாயாக உயர்ந்துள்ளது.

மற்ற பயனாளர்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 200 ரூபாய் சிலிண்டர் மானியம் பொருந்தும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு குறித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராத் தாகூர் ரக்ஷா பந்தன் மற்றும் ஓணம் பண்டிகை விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் பரிசு என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பொது தேர்தல் மற்றும் சில மாநிலங்களின் சட்டமன்ற பொது தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக இண்டியா கூட்டணி அமைத்துள்ள நிலையில் அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசின் சிலிண்டர் விலை குறைப்பு குறித்து விமர்சனம் செய்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "இதுவரை இந்தியக் கூட்டணியால் கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. இன்று எல்பிஜி விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது. இதுதான் #இந்தியாவின் சக்தி!" என எதிர்க்கட்சிகளின் வலுவான கூட்டணியில் காரணமாக பாஜக கேஸ் சிலிண்டர் விலை குறைத்திருப்பதாக பொருள் படும்படி பாஜகவை மறைமுகமாக விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.
English Summary
Rs200 gas cylinder price reduced due to India alliance 2 meeting