அதிமுக பிளவை சரி செய்ய களமிறங்கிய ரஜினிகாந்த்? டெல்லி அஸைன்மென்ட்! அதிமுக பிரச்சனைக்கு விரைவில் தீர்வு!
Rajinikanth steps in to fix AIADMK split Delhi assignment AIADMK problem to be resolved soon
தமிழக அரசியலில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய பரபரப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக), கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ள நிலையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் தீவிரமடைந்து வருகிறது. இந்த சூழலில், அதிமுக தலைவர்களை சமரசப்படுத்த நடிகர் ரஜினிகாந்த் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எடப்பாடி பழனிசாமி அணிக்கும், எஸ்.பி. வேலுமணி – சி.வி. சண்முகம் அணிக்கும் இடையிலான மோதல் வெளிப்படையான அதிகாரப் போராட்டமாக மாறியுள்ளது. குறிப்பாக, தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து வாக்களித்தது கட்சிக்குள் நிலவும் பிளவை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
இந்த நிலையில், அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க நடிகர் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிமுக மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறுகையில், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று நீண்ட காலமாக எதிர்பார்ப்பு இருந்தது. 2021 தேர்தலுக்கு முன்பு கட்சி தொடங்குவதாக அறிவித்த அவர், பின்னர் உடல்நலக் காரணங்களால் அரசியலில் இருந்து விலகினார். இருந்தாலும் தமிழக அரசியலை தொடர்ந்து கவனித்து வருகிறார்” என்று தெரிவித்தனர்.
மேலும், “திமுக மற்றும் பாஜக தலைவர்களுடன் ரஜினிக்கு நல்ல உறவு உள்ளது. தேர்தலுக்குப் பிறகு பெரும்பான்மை இல்லாத சூழலில், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் முயற்சி நடந்தபோது கூட ரஜினி மறைமுகமாக ஆலோசனை வழங்கியதாக தகவல்கள் வந்தன. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை” என்றும் கூறப்படுகிறது.
அதிமுகவில் தற்போது உருவாகியுள்ள பிளவை சமாளிக்க, கடந்த ஒரு வாரமாக ரஜினி தனது நெருங்கிய அரசியல் தொடர்புகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, “தமிழ்நாட்டின் அரசியல் சமநிலைக்கு அதிமுக அவசியம். உங்களுக்குள் மோதிக்கொள்ளாமல் ஒன்றிணைந்து செயல்படுங்கள்” என்று அதிமுக மூத்த தலைவர்களிடம் ரஜினிகாந்த் நேரடியாக கூறியதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில், கட்சி தொடங்கி வெறும் இரண்டு ஆண்டுகளில் விஜய் முதலமைச்சராக உயர்ந்திருப்பது ரஜினிக்கு ஒரு வகை வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. “உடல்நலம் ஒத்துழைத்திருந்தால் நானும் அரசியலில் முழுமையாக இறங்கியிருப்பேன்” என்று ரஜினி தனது நெருங்கியவர்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இந்த தகவல்கள் குறித்து ரஜினிகாந்த் தரப்பிலோ அல்லது அதிமுக தரப்பிலோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், தமிழக அரசியலில் ரஜினியின் பெயர் மீண்டும் பேசப்படத் தொடங்கியுள்ளது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
English Summary
Rajinikanth steps in to fix AIADMK split Delhi assignment AIADMK problem to be resolved soon