''தேனி மாவட்ட மலைவாழ் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க நடடிக்கை எடுக்க வேண்டும்''; தமிழக அரசுக்கு ஐஜேகே தலைவர் வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


''வன உரிமைச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளின் அடிப்படையில், பாரம்பரியமாக வசித்து வரும் மலைவாழ் மக்களின் வாழ்வுரிமை, (தேனி, மேகமலை, வருசநாடு, கண்டமனூர் மலைப்பகுதி) குடியிருப்பு உரிமை மற்றும் விவசாய உரிமை முழுமையாக உறுதி செய்யப்பட வேண்டும்'' என்று இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

''தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு, கண்டமனூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மலைவாழ் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தி நடைபெற்று வரும் முழு கடையடைப்பு போராட்டம், அவர்களின் ஆழ்ந்த வேதனையையும் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் வெளிப்படுத்துகிறது.

பல ஆண்டுகளாக தங்களின் சொந்த மண்ணில் வாழ்ந்து, விவசாயம் செய்து, குடும்பங்களை நடத்தி வரும் மக்களை திடீரென ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கருதி வெளியேற்றும் எந்த நடவடிக்கையும் மனிதநேயத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானதாகும். பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வுரிமை எந்த சூழலிலும் பாதிக்கப்படக் கூடாது.

வனத்துறை அறிவிப்பின்படி, ரேஷன் கார்டு, அங்கன்வாடி பதிவுகள், பள்ளிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை சமர்ப்பித்தால், வன உரிமைச் சட்டத்தின்படி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து அனைத்து அரசு ஆவணங்களையும் வைத்திருக்கும் மக்களையே ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலில் சேர்த்து, அவர்களுக்கான அடிப்படை வசதிகள் முடக்கப்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் போராடுகின்றனர். இந்த அச்சத்தை தமிழக அரசு உடனடியாக போக்க வேண்டும்.

வன உரிமைச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளின் அடிப்படையில், பாரம்பரியமாக வசித்து வரும் மலைவாழ் மக்களின் வாழ்வுரிமை, குடியிருப்பு உரிமை மற்றும் விவசாய உரிமை முழுமையாக உறுதி செய்யப்பட வேண்டும். எந்த குடும்பமும் உரிய விசாரணையின்றி வெளியேற்றப்படக் கூடாது.

மேலும், இந்த விவகாரத்தில் மலைவாழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்து, மக்களின் நலனை உறுதிப்படுத்த தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மேகமலை உள்ளிட்ட மலைப்பகுதி மக்கள் இந்த மண்ணின் இயற்கையையும், வளங்களையும் பல தலைமுறைகளாக பாதுகாத்து வருபவர்கள். அவர்களின் வாழ்வாதாரத்தையும், பாரம்பரிய உரிமைகளையும் காப்பது அரசின் தார்மீக மற்றும் அரசியலமைப்புச் சட்டப் பொறுப்பாகும்.

எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரதிநிதிகளுடன் தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, வன உரிமைச் சட்டத்தின்படி முழுமையான பாதுகாப்பு வழங்கவும், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்று அறிக்கையில்  ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IJK leader urges action to protect the right to life of the hill people of Theni district


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->