தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றியவர் பெயரிலேயே பல்கலைக்கழகம்... ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு கடைசி இடமா...? - வைரமுத்து கடும் கொந்தளிப்பு
university named after person who wrote Tamil tamizhthai vazhthu but last place fot it Vairamuthu got anger
மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இறுதியில் இடம் அளிக்கப்படுவது மரபு மீறல் என கவிஞர் வைரமுத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா ஜூலை 28-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் தமிழ்நாடு கவர்னர் பங்கேற்க உள்ளார்.
இதையொட்டி, விழா நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் முதலில் வந்தே மாதரம், அதன்பிறகு தேசிய கீதம், இறுதியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என கவர்னர் அலுவலகத்திலிருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படியே பட்டமளிப்பு விழா நடைபெறும் என பல்கலைக்கழக துணைவேந்தர் என்.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நிகழ்ச்சிகளின் வரிசை குறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கவர்னரின் அறிவுறுத்தல் அச்சம் தருகிறது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வந்த மரபுகள் நொறுக்கப்படுகின்றன.
ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்திலோ, மக்கள் மன்றத்திலோ அல்லது அந்த மாநிலத்தின் கல்வி எல்லைக்குட்பட்ட பல்கலைக்கழகத்திலோ முதலில் மாநில மொழிக்கான வாழ்த்தும், அதன்பின்னர் தேசிய கீதமும் பாடப்பட்டு வந்ததே மரபாகும்.
ஆனால், முதலில் தேசப் பாடலும், அதன்பின்னர் தேசிய கீதமும், இறுதியாக தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்துவது மரபையும் உரிமையையும் மீறும் செயலாகும்.
தமிழ்த்தாய் வாழ்த்து இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து இறுதிக்கு தள்ளப்படுவது வேதனை அளிக்கிறது.
இந்த வரிசை மாற்றம் தேவையில்லை. அந்தந்த மாநில மொழிகளுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படுவதுதான் கூட்டாட்சி மரபையும் நாட்டின் இறையாண்மையின் மாண்பையும் காக்கும் வழியாகும்.
இந்த வரிசை மாற்றத்திற்கு வெற்றித்தமிழர் பேரவை சார்பில் எனது கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன். கழற்றப்பட்ட தமிழ்த்தாயின் மகுடம் மீண்டும் அவரது சிரசில் சூட்டப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
English Summary
university named after person who wrote Tamil tamizhthai vazhthu but last place fot it Vairamuthu got anger