நாளுக்கு நாள் இறுகும் பிடி! முதல்வர் ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் நெருக்கடி! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் நவம்பர் 15 முதல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்க இருக்க நிலையில், தமிழ்நாட்டில் எப்போது? என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆந்திரத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு வரும் நவம்பர் 15-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில்  மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள சாதிகளை அடையாளம் கண்டு அவர்களின் முன்னேற்றத்திற்கான சமூகநீதித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கர்நாடகம், பிகார், ஒதிஷா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் ஆந்திர அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது.

இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு இதுவரை முன்வரவில்லை என்ற போதிலும்,  சமூகநீதியில் அக்கறை கொண்ட மாநிலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி வருகின்றன. இராஜஸ்தான் போன்ற சில மாநிலங்கள் விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. ஆக்கப்பூர்வமான வகையில் மாறிவரும் சமூகநீதிச் சூழலில், எந்த ஒரு மாநிலமும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் இருக்க முடியாது என்பது உறுதியாகி விட்டது. அதனால், தங்கள் மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலான மாநிலங்களில், குறிப்பாக தமிழ்நாட்டில்  ஏற்பட்டிருக்கிறது.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில்  தமிழக அரசு இரட்டை நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது. தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தேசிய அரங்குகளில் வலியுறுத்தி வரும் திமுக,  அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர மறுக்கிறது. அதேநேரத்தில், தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; இல்லாவிட்டால் ஆந்திரத்தில் மாநில அரசே கணக்கெடுப்பு நடத்தும் என்று ஆந்திர சட்டப்பேரவையில் 11.04.2023 -ஆம் நாள் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய  ஜெகன்மோகன் ரெட்டி அரசு,  தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 6 மாதங்களாகியும் மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில், மாநில அளவில் கணக்கெடுப்பு நடத்த தயாராகிவிட்டது.  ஆனால்,  தமிழக அரசோ, அத்தகைய தீர்மானத்தைக் கூட சட்டப்பேரவையில் நிறைவேற்ற தயங்கிக் கொண்டிருக்கிறது.

ஆந்திர மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சமுதாயங்களில், 30 ஆயிரத்திற்கும் கூடுதலாக மக்கள் தொகை கொண்ட அனைத்துச் சாதிகளுக்கும், தனித்தனியாக நலவாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  அந்த நிறுவனங்களுக்கு நிதி அதிகாரம் அளிக்கப்பட்டு  இருப்பதால்,  ஒவ்வொரு சமூகத்திற்கும் தேவையான நலத்திட்ட உதவிகள், முதியோர் ஓய்வூதியம், கல்விக்கட்டணம், தொழில் தொடங்கக் கடனுதவி, மருத்துவ உதவிகள் ஆகியவற்றை  அந்தந்த வாரியங்களே வழங்குகின்றன.  அதேபோன்ற வாரியங்களை  தமிழ்நாட்டிலும்  தொடங்க வேண்டும் என்று கடந்த 4 ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.  ஆனால், முன்பு ஆண்ட கட்சியும், இப்போது ஆளும் கட்சியும் இந்த கோரிக்கையை நிறைவேற்ற மறுக்கின்றன.

சமூகநீதி மண் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாவிட்டால், சமூக, பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு பின் தங்கி விடும். எனவே,  தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை விரைவாக நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். அதற்கான கால அட்டவணையை  தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்" என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Founder DR ramadoss questioned TN govt about caste vise census


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->