பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரிவிதிப்பு வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் - அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss GST Petrol diesel
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "ஜி.எஸ்.டி கவுன்சிலால் தீர்மானிக்கப்பட்டு, மத்திய அரசால் வரும் 22-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை. அடித்தட்டு மக்கள் முதல் அரசு வரை அனைத்துத் தரப்பினருக்கும் இந்த சீர்திருத்தங்கள் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.
இது வரை நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி வரி விகிதங்கள், 40% வரிப் பிரிவு இல்லாமல் 5%, 18% என இரட்டை அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளன. இதனால் மின்னணு பொருள்கள், செல்பேசிகள், வாகனங்கள், காப்பீடுகள் ஆகியவற்றின் வரி குறைக்கப்படவுள்ளன. இதனால், அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதைப் போல தோன்றினாலும், வணிகம் அதிகரித்து அதிக எண்ணிக்கையில் ஒவ்வொரு பொருளும் விற்பனை செய்யப்படும் போது மிகக் குறுகிய காலத்தில் அந்த வருவாய் இழப்பு ஈடு செய்யப்படும். அதுமட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு பெருக்கம் ஆகியவற்றுக்கும் இந்த சீர்திருத்தம் வகை செய்யும்.
உடல நலனுக்கு கேடு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்கள் போன்றவற்றின் மீதான வரி 40% அதிகரிக்கப்பட்டிருப்பது மிகவும் சரியானது. அதேநேரத்தில் பீடியின் மீதான வரி 28 விழுக்காட்டில் இருந்து 40% ஆக அதிகரிக்கப்படுவதற்கு பதிலாக 18% ஆக குறைக்கப்பட்டிருப்பது, பரோட்டா போன்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவு வகைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இட்லி, தோசை போன்றவற்றுக்கு 5% வரி விதிக்கப்படுவது போன்ற திருத்தப்பட வேண்டிய குறைகளும் உள்ளன. அவை சரி செய்யப்பட வேண்டும்.
சிங்கப்பூரில் உள்ளது போன்ற ஒற்றை அடுக்கு ஜி.எஸ்.டியை நோக்கி பயணிப்பது தான் நமது இலக்காக இருக்க வேண்டும்; அதேபோல், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு விரைவுபடுத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss GST Petrol diesel