சென்னை - கடலூர், திண்டிவனம் - தி.மலை புதிய பாதை திட்டங்களை கிடப்பில் போடுவதா? அன்புமணி இராமதாஸ் கண்டனம்! - Seithipunal
Seithipunal


 பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூர் புதிய தொடர்வண்டிப் பாதைத் திட்டம்,  திண்டிவனம் - திருவண்ணாமலை  புதிய தொடர்வண்டிப் பாதைத் திட்டம், அத்திப்பட்டு - புத்தூர் புதிய தொடர்வண்டிப் பாதை ஆகிய 3 திட்டங்களையும் கிடப்பில் போட்டிருப்பதாக  தெற்கு தொடர்வண்டித்துறை தெரிவித்துள்ளது.  மதுரை - தூத்துக்குடி, ஈரோடு- பழனி இடையிலான புதிய பாதைத் திட்டங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தெற்கு தொடர்வண்டித்துறையில் இந்த நடவடிக்கை கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி இந்தத் தகவல்களை தெற்குத் தொடர்வண்டித்துறை  தெரிவித்துள்ளது. இதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றாலும் கூட, போதிய நிதி ஒதுக்கப்படாதது, தமிழக அரசால் நிலம் கையகப்படுத்தித் தரப்படாதது, தொடர்வண்டித்துறையின் தவறான வருவாய்க் கணக்கீடுகள் ஆகியவை தான் காரணமாகக் கூறப்படுகின்றன.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அரங்க.வேலு தொடர்வண்டித்துறை இணை அமைச்சராக பதவி வகித்த போது, 2008-ஆம் ஆண்டில் சென்னையிலிருந்து  மாமல்லபுரம் வழியாக கடலூர் வரை  178 கிலோமீட்டர் தொலைவுக்கு தொடர்வண்டிப் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அத்திட்டத்திற்காக ரூ.523 கோடி நிதி ஒதுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்பின் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டிருந்தால் 12 ஆண்டுகளுக்கு முன்பே இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்திருக்கும்.

ஆனால், உரிய நிதி ஒதுக்கீடு, மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் 17 ஆண்டுகளாக இது கனவுத் திட்டமாகவே  தொடர்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் இத்திட்டம் ரத்து செய்யப்படுவதும், கிடப்பில் போடப்படுவடும்  இது மூன்றாவது முறையாகும். 2017, 2021 ஆகிய ஆண்டுகளில் இத்திட்டம் ரத்து செய்யப்பட போது, பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட நடவடிக்கைகளால் இத்திட்டம் காப்பாற்றப்பட்டது. போராடி மீட்கப்பட்ட இந்தத் திட்டத்தை தெற்கு தொடர்வண்டித்துறை கிடப்பில் போடுவதை ஏற்க முடியாது.

அதேபோல், பா.ம.க.வால் அறிவிக்கப்பட்ட திண்டிவனம் &- திருவண்ணாமலை புதிய பாதை திட்டத்திற்கு இன்னும் 90 சதவீத நிலம் கையகப்படுத்தப்படவில்லை; அத்திப்பட்டு &- புத்தூர்  புதிய பாதை திட்டத்திற்கு  ஒரு ஏக்கர் நிலம் கூட கையகப்படுத்தப்படவில்லை.  அதுமட்டுமின்றி, திண்டிவனம் - & திருவண்ணாமலை திட்டத்திற்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.100 கோடி பின்னர் ரத்து செய்யப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக இதுவரை ரூ.72.87 கோடி செலவிடப்பட்டுள்ள நிலையில் இந்தத் திட்டத்தை கைவிடுவது முறையல்ல.

தமிழ்நாட்டிற்கான  தொடர்வண்டித் திட்டங்கள் கைவிடப்படுவதற்கு  தமிழக அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாடு வளர்ச்சியடைய வேண்டும்; தமிழ்நாட்டிற்கு புதிய தொடர்வண்டித் திட்டங்கள் தேவை என்றால்  அதற்கான நிலங்களை கையகப்படுத்தித் தருவதுடன், திட்டச் செலவில் பாதியை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா கூட, அம்மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டங்களில் 9 திட்டங்களின் மதிப்பான ரூ.16,235 கோடியில் 60% தொகையான ரூ.9,847 கோடியை கர்நாடகம் வழங்கும்; 7 திட்டங்களுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்தித் தருவதற்கான செலவு முழுவதையும் தமது அரசு ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்துள்ளார். ஆனால், தமிழகத்தை ஆளும் விளம்பர மாடல் அரசு அதற்கெல்லாம் தயாராக இல்லை.

தொடர்வண்டித் திட்டங்கள் அதிகமாக தேவைப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையானது. எனவே,  சென்னை - கடலூர்,  திண்டிவனம் - திருவண்ணாமலை, அத்திப்பட்டு - புத்தூர் ஆகிய புதிய பாதைத் திட்டங்களை கிடப்பில் போடும் முடிவைக் கைவிட்டு,  அத்திட்டங்களுக்கு உடனடியாக போதிய நிதி ஒதுக்கீடு  செய்து செயல்படுத்த வேண்டும். அத்திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்தித் தருவது, திட்டச் செலவுகளை பகிர்ந்து கொள்வது  ஆகியவற்றின் மூலம் இத்திட்டங்கள்  விரைவாக செயல்படுத்தப்படுவதற்கு தமிழக அரசும் பங்களிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Anbumani Ramadoss Condemn to railway


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->