நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு அஞ்சி திராவிட மாடல் ஆட்சியாளர்கள் ஓடுவது ஏன்? அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin Election Promise issue 2021
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வினா
திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருப்பது மட்டுமின்றி, சொல்லப்படாத பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்திருக்கிறார். திமுகவின் அகராதியில் பொய் என்ற சொல்லுக்கு பெருமிதம் என்று புதிதாக பொழிப்புரை எழுதியிருக்கிறார்கள் போலும். அதனால் முதலமைச்சர் மீண்டும், மீண்டும் பொய் சொல்லி விட்டு, அதை பெருமிதம் என்று நினைத்துக் கொள்கிறார்.
திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் வெறும் 66 மட்டும் தான் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டு. அதற்கு பதிலளிப்பதாகக் கூறி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட 3 அமைச்சர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். மொத்தம் ஒரு மணி நேரத்திற்கு செய்தியாளர்கள் சந்திப்பு நீடித்தது; ஆனால், அதில் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அமைச்சர்கள் விளக்கியது அரை நிமிடம் தான். இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் குறித்து 32 பக்கங்களுக்கு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் தேர்தல் வாக்குறுதிகள் பற்றிய விளக்கம் வெறும் 12 வரிகள் மட்டும் தான். இதைத் தான் விரிவான தரவுகளுடன் அமைச்சர் விளக்கியதாக முதலமைச்சர் கூறுகிறார்.
திமுக அரசு உண்மையாகவே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அவற்றின் வரிசை எண் வாரியாக எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன? அவற்றுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? அதனால் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளனர்? என்ற விவரங்களை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும். இதைத் தான் பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நேர்மையான அரசாக இருந்தால், வெள்ளை அறிக்கை வெளியிடாமல் அஞ்சி நடுங்கி ஓடுவது ஏன்?
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பெரும் குறையே நாட்டிலும், அவரது அரசிலும் என்ன நடக்கிறது? என்பதே அவருக்கு தெரியாது என்பது தான். அவரைச் சுற்றியுள்ளவர்கள் என்ன கூறுகிறார்களோ, அவை அனைத்தையும் உண்மை என்று நம்பி அவர் பேசிக் கொண்டுருக்கிறார். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் அறிவாளிகள். அவர்கள் மு.க.ஸ்டாலின் சொல்லும் பொய்களை எல்லாம் உண்மை என்று நம்ப மாட்டார்கள். பொய்யுரைப்போருக்கு வழங்க வேண்டிய தண்டனையை வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் வழங்குவார்கள்.
English Summary
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin Election Promise issue 2021