அரசு மருத்துவர் சங்கத் தலைவரை பணியிட மாற்றம் செய்து பழிவாங்குவதா? திமுக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டம் மேட்டூர் முதல் சென்னை கலைஞர் நினைவிடம் வரை அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுவினர் நடைபயணம் மேற்கொண்டதற்காக அவர்களின் தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை சென்னையிலிருந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதும், அவருக்கு குற்ற குறிப்பாணை 17 பி வழங்கப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கவை.
அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. அவற்றை நிறைவேற்றுவதற்கு பதிலாக அவற்றுக்காக குரல் கொடுக்கும் மருத்துவர்களை பழிவாங்குவது நியாயமல்ல.
கடந்த ஆட்சிக் காலத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட போது அதைக் கண்டித்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்னர் அதேபோன்ற பழிவாங்கலை மேற்கொள்வது நியாயமல்ல.
எனவே, அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுத் தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அதுமட்டுமின்றி, அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin