திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ்... பிரதமர் மோடி கடும் விமர்சனம்!
pm modi condemn to congress for dmk alliance breake
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மாநில அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களைப் பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். இந்தச் சூழலில், திமுக கூட்டணியில் இருந்து விலகி த.வெ.க-விற்கு ஆதரவளித்துள்ள காங்கிரஸ் கட்சியைப் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகச் சாடியுள்ளார்.
பெங்களூருவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் காங்கிரஸின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளதாகத் தெரிவித்தார். கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாக திமுகவுடன் இணக்கமாக இருந்த காங்கிரஸ், தனக்கு ஆபத்து வரும்போதெல்லாம் திமுகவின் தயவிலேயே பிழைத்து வந்ததாக அவர் குறிப்பிட்டார். குறிப்பாக 2014-க்கு முந்தைய 10 ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், காங்கிரஸ் பிழைத்திருந்ததே திமுக அளித்த கியாரண்டியால் தான் என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.
இத்தனை காலம் காங்கிரஸின் வளர்ச்சிக்காகத் தோள் கொடுத்த திமுகவை, அரசியல் சூழல் மாறியவுடன் காங்கிரஸ் கைவிட்டுவிட்டதாகப் பிரதமர் குற்றம் சாட்டினார். "அதிகார வெறி கொண்ட காங்கிரஸ் கட்சி, தங்களுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே திமுகவின் முதுகில் குத்திவிட்டது" என்று அவர் விமர்சித்தார். ஒரு ஒட்டுண்ணித் தன்மையுள்ள கட்சியாக மாறியுள்ள காங்கிரஸிற்கு, அரசியலில் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள எப்போதும் மற்றொரு கட்சியின் முதுகில் ஏறிச் செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதாக அவர் எள்ளி நகையாடினார்.
தமிழகத்தில் த.வெ.க அரசு அமைந்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த விமர்சனம் தேசிய அளவிலும் மாநில அளவிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவிற்கு ஆதரவாகவும் காங்கிரஸிற்கு எதிராகவும் பிரதமர் முன்வைத்துள்ள இந்தக் கருத்துக்கள், வரவிருக்கும் நாட்களில் தமிழக அரசியலில் புதிய கூட்டணிக் கணக்குகளுக்கு வித்திடலாம் எனக் கருதப்படுகிறது.
English Summary
pm modi condemn to congress for dmk alliance breake