கே.என்.நேரு - துரை வைகோ இடையே பகிரங்க மோதல்...! திமுகவில் இணைய முயன்றார்...! - கே.என்.நேரு பரபரப்புப் பேச்சு
Open clash between KN Nehru and Durai Vaiko He tried to join DMK KN Nehru sensational speech
திருச்சியில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு அளித்த பேட்டியைத் தொடர்ந்து, அவருக்கும் ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் தீவிரமடைந்துள்ளது.திருச்சியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கே.என்.நேருவிடம், தி.மு.க.வை துரை வைகோ கடுமையாக விமர்சித்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கே.என்.நேரு, துரை வைகோ என்ன பேசினார் என்பது தனக்குத் தெரியாது என்றும், ஆனால் அவர் பிறப்பதற்கு முன்பு நடைபெற்ற மிசா கால சம்பவங்கள் குறித்தெல்லாம் தற்போது பேசுவதாகவும் தெரிவித்தார்.மேலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து துரை வைகோ கருத்து தெரிவிக்க உரிமை இல்லை என்றும் அவர் கூறினார்.

தனது தந்தை கோபக்காரர் என்றும், கட்சியில் வளர்ச்சி இல்லை என்றும், தன்னால் கட்சியை நடத்த முடியாது என்றும் கூறி, தி.மு.க.வில் இணைய விரும்புவதாக துரை வைகோ தன்னிடம் தெரிவித்ததாகவும் கே.என்.நேரு குறிப்பிட்டார்.சிறுவயதில் இருப்பவர் என்பதால் துரை வைகோ தெரிவிக்கும் கருத்துகளுக்கெல்லாம் தன்னால் பதில் அளிக்க முடியாது என்றும் கே.என்.நேரு தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த துரை வைகோ, தாம் தி.மு.க.வில் இணைய விரும்பியதாக கே.என்.நேரு கூறுவது முற்றிலும் கட்டுக்கதை என்று தெரிவித்தார்.
தனக்கு தனிப்பட்ட அரசியல் விருப்பமோ, பதவி வேட்கையோ கிடையாது என்றும் அவர் கூறினார். கலைஞர் கருணாநிதியின் காலத்துடன் தி.மு.க. முடிவுக்கு வந்துவிட்டதாக கே.என்.நேரு தன்னிடம் தெரிவித்ததாகவும் துரை வைகோ கூறினார்.மேலும், மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தெரியாது என்று கூறியவரே கே.என்.நேருதான் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.தி.மு.க.வில் பலருடைய அரசியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டவர் கே.என்.நேரு என்றும், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் தேர்தல் தோல்விக்கு கே.என்.நேருவே காரணம் என்றும் துரை வைகோ தெரிவித்தார்.
திருச்சியைச் சேர்ந்த தி.மு.க.வின் முக்கியப் பிரமுகர் உள்ளிட்ட தன்னைச் சுற்றி இருந்த பலரையும் நேரு அரசியலில் இருந்து ஒதுக்கியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்தி அரசியல் செய்ய முடியாது என்று கூறியவரும் கே.என்.நேருதான் என்றும் துரை வைகோ தெரிவித்தார்.கூட்டணியில் இருந்த காலத்திலேயே தன்னைப் பற்றி தி.மு.க.வினர் அவதூறாக பேசியதாகவும், தன்னை சிறுமைப்படுத்துவதையோ, பண்ணையார் அரசியல் பாணியிலான அணுகுமுறையையோ ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் அவர் கூறினார்.
தனிமனித தாக்குதலுக்கு பயப்படுபவன் தான் இல்லை என்றும், யாராலும் தன்னை மிரட்ட முடியாது என்றும் துரை வைகோ தெரிவித்தார். தன்னிடம் பல முக்கியமான தகவல்கள் இருப்பதாகவும், அவற்றை அனைத்தையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் பேச வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.தான் அரசியலுக்கு வந்தது எதிர்பாராத நிகழ்வு என்றும் துரை வைகோ தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தன்னை வேட்பாளராக அறிவித்த உடனேயே, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், வேறு சின்னத்தில் போட்டியிட்டால் தி.மு.க.வினரே ஒத்துழைக்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போதுகூட தனக்கு இதுபோன்ற அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், அன்றே தான் எந்த சூழ்நிலையிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்ததாகவும் துரை வைகோ கூறினார்.தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே அரசியலுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.தன்னை சிறுமைப்படுத்துவதும், பண்ணையார் அரசியல் நடத்துவதும் தன்னிடம் எடுபடாது என்றும் துரை வைகோ கூறினார்.
தன்னை மதிப்பவர்களை தானும் மதிப்பேன் என்றும், அதற்கு மாறாக தனக்கு எதிராக செயல்பட்டால் அதற்குப் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.மிசா காலத்தில் தான் பிறக்கவே இல்லை என்று கே.என்.நேரு தெரிவித்திருப்பது தவறான தகவல் என்றும் துரை வைகோ கூறினார்.
மிசா அமல்படுத்தப்பட்ட காலகட்டத்தில் தனக்கு 3 வயது என்றும், அப்போது தான் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்ததாகவும் அவர் விளக்கம் அளித்தார்.மிசா கால வரலாறு குறித்த உண்மைகள்கூட கே.என்.நேருவுக்கு தெரியவில்லை என்றும் துரை வைகோ தெரிவித்தார்.
English Summary
Open clash between KN Nehru and Durai Vaiko He tried to join DMK KN Nehru sensational speech