நான் லட்சியத்தோடு வருகிறேன்! நீங்க 2 லட்சுமியோட வருகிறீர்கள்! உதகையில் எகிறிய சீமான்!
NTK Seeman response to vijayalakshmi issue
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே இன்று நீலகிரி மாவட்டம் உதகையில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் விஜயலஷ்மி விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர் "ஏதாவது நடந்திருந்தால் தானே பதில் சொல்வதற்கு, நீங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் அதனை நான் சட்டப்படி எதிர்கொள்வேன். நான் கோடி கனவுகளுடன் ஓடிக் கொண்டிருப்பவன். உயர்ந்த கருத்துகளோடு பெரும் கனவை வைத்துக் கொண்டு இந்த களத்தில் அரசியல் செய்ய வந்தவன்.
நான் கருணாநிதி மகனோ, ஸ்டாலின் மகனோ அல்லது எம்ஜிஆர் தொடங்கிய கட்சியை கைப்பற்றி வந்தவனோ இல்லை. 50 ஆண்டுகள் நடித்து ரசிகர்களை தொண்டனாக்கி அரசியலுக்கு வந்தவனும் இல்லை. நாம் தமிழர் என்ற கட்சி கருவறையில் இருந்தும் பிறக்கவில்லை.

நான் இதுவரை எந்த தேர்தல் களத்திலாவது கூட்டணி வைத்திருக்கேனா தனியா தான் சண்டை செய்கிறேன். நேருக்கு நேர் என்னோடு மோத வராமல் இப்படி பெண்களை இருட்டில் இருந்து தூண்டி விடுகிறார்கள். நான் உயர்ந்த லட்சியத்தை தூக்கிக் கொண்டு வருகிறேன். நீங்கள் இரண்டு லட்சுமிகளை தூக்கிக் கொண்டு சண்டை போடுகிறீர்கள். அரசியல் களத்தில் வீழ்த்துவதற்கு கையில் எடுத்துள்ள கருவி மிகவும் கேவலமானது.
கடந்த 13 ஆண்டுகளாக இதே பிரச்சனையை தேர்தல் வரும் போது மட்டும் பேசிக் கொண்டிருந்தால் அரசியல் இல்லாமல் இவர்கள் பேசுவார்களா? நான் அமைதியாக இருப்பதால் அந்தப் பெண் சொல்வதெல்லாம் உண்மை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அமைதியாக இல்லாமல் ஒரு நாள் நான் வெடித்து சிதறினால் ஒருத்தனும் தலை காட்ட முடியாது" என ஆவேசமாக பேசியுள்ளார்.
English Summary
NTK Seeman response to vijayalakshmi issue