'பழைய பவர் எதுவும் செல்லாது'...! அதிமுகவிற்குள் வரத் துடிக்கும் முக்கியப் புள்ளிகளுக்கு இபிஎஸ் கொடுத்த அதிரடி எச்சரிக்கை...!
No old power is valid EPS sharp warning key points trying enter AIADMK
சேலத்தில் நடைபெற்ற கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தவர்கள் அங்கு எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும் என்று தெரிவித்தார். தன்னை எந்த நேரத்திலும் வந்து சந்திக்க முடியும் என்றும், ஆனால் மற்ற கட்சிகளின் தலைவர்களை சாதாரண தொண்டர்களால் எளிதில் சந்திக்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் சூழ்நிலைகளும் ஆட்சிப் பொறுப்புகளும் காலத்துக்கு ஏற்றவாறு மாறும். அப்போது தங்களிடம் இருந்து பிரிந்து சென்ற பலரும் மீண்டும் அ.தி.மு.க.வை நாடி வருவார்கள். அவ்வாறு வருபவர்கள் அனைவரும் எந்தவித சிறப்பு அந்தஸ்தும் இன்றி, பூஜ்ஜிய நிலையிலிருந்தே தங்களது அரசியல் பயணத்தை மீண்டும் தொடங்க வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய அவர், கடந்த தேர்தலில் பல முக்கிய அரசியல் தலைவர்களுக்கே வெற்றி கிடைக்கவில்லை என்றும், த.வெ.க. தலைவர் விஜய் தன்னம்பிக்கை குறைவால் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதாகவும் விமர்சித்தார். ஆனால் எடப்பாடி தொகுதியில் தாம் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மக்களின் நம்பிக்கைக்குக் கிடைத்த அங்கீகாரம் என்றும் கூறினார்.
மேலும், பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரின் புகழையும் உருவப் படங்களையும் முன்னிறுத்தியே விஜய் மாநிலம் முழுவதும் மக்களைச் சந்தித்தார் என்றும், அந்த அடையாளங்களின் தாக்கத்தால் கிடைத்த வெற்றியை தனிப்பட்ட அரசியல் வெற்றியாகக் கருத முடியாது என்றும் விமர்சனம் முன்வைத்தார்.
அதன்பின்னர், திரைப்படத் தயாரிப்பாளருக்கு டெல்லி சிறப்புப் பிரதிநிதி பொறுப்பும், அவருடைய ஆலோசகருக்கு தமிழ்நாடு அரசின் ஆலோசகர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இதே நிலை தொடர்ந்தால் முதலமைச்சரின் ஒப்பனை கலைஞருக்குக் கூட விரைவில் உயர்பதவி வழங்கப்படும் நிலை உருவாகும் எனக் கடுமையாக விமர்சித்தார்.
த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்று அறுபது நாட்களே ஆன நிலையில், மாநிலத்தில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாத காரணத்தாலேயே நிறைவேற்ற முடியாத ஏராளமான வாக்குறுதிகளை விஜய் அறிவித்ததாகவும், தற்போது நிதி நெருக்கடியால் அவற்றை செயல்படுத்த முடியாமல் திணறி வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், த.வெ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கவில்லை; கூட்டணி கட்சிகளின் ஆதரவில்தான் அரசு செயல்பட்டு வருகிறது. அந்த ஆதரவு எப்போது வேண்டுமானாலும் விலகக்கூடும். அத்தகைய சூழல் உருவானால் ஆட்சியே நிலைதடுமாறும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற முழு நம்பிக்கை இருப்பதாகவும், அதற்காக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் முழு ஒற்றுமையுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
English Summary
No old power is valid EPS sharp warning key points trying enter AIADMK