சிங்காரச் சென்னையின் உண்மையான நிலை என்ன...? சிறந்த நடைபாதை நகரங்கள் பட்டியலில் வெளியான முக்கியத் தகவல்...!
What real status Singara Chennai Important information released list best walking cities
இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் பாதுகாப்பாகவும், தடையின்றியும் நடந்து செல்ல வேண்டிய நடைபாதைகள் போதுமான அளவில் இல்லாத அதிர்ச்சிகரமான உண்மையை புதிய ஆய்வறிக்கை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. நகரங்களில் நடைபாதைகளின் தரம், தொடர்ச்சியான பயன்பாடு மற்றும் பாதசாரிகளுக்கான உள்கட்டமைப்பு எந்த நிலையில் உள்ளது என்பதை விரிவாக ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ள 'ஸ்டேட் ஆப் இந்தியன் ஸ்டிரீட்ஸ்–2026' அறிக்கை பல்வேறு முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

நகர்ப்புற தரவு மற்றும் தொழில்நுட்ப ஆய்வில் ஈடுபட்டு வரும் 'நியூ ரல் சிட்டி' அமைப்பு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள சாலைகளின் தரைமட்டப் படங்கள், செயற்கைக்கோள் தகவல்கள் மற்றும் பல்வேறு தரவுகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் பகுப்பாய்வு செய்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
வெறும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதா என்பதை மட்டுமே கணக்கில் கொள்ளாமல், அந்த நடைபாதையில் குறைந்தது 100 மீட்டர் தூரம் எந்தவித தடையும் இல்லாமல் ஒரு பாதசாரி பாதுகாப்பாகவும், சிரமமின்றியும் தொடர்ந்து நடந்து செல்ல முடியுமா என்ற முக்கிய அளவுகோலின் அடிப்படையில் நகரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த மதிப்பீட்டில் உத்தரப்பிரதேசத்தின் லக்னோ நகரம் 28 சதவீத தரமான நடைபாதைகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதாவது, அந்த நகரத்தின் 100 கிலோமீட்டர் சாலை நீளத்தில் 28 கிலோமீட்டர் வரை மட்டுமே தடையற்ற நடைபாதை வசதி இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் கர்நாடகத்தின் பெங்களூரு 25.9 சதவீதமும், மூன்றாவது இடத்தில் தெலுங்கானாவின் ஐதராபாத் 15.1 சதவீதமும் பெற்றுள்ளன.தமிழகத்தின் தலைநகர் சென்னை 13.9 சதவீத தரமான நடைபாதை வசதிகளுடன் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து விசாகப்பட்டினம் 13.4 சதவீதம், குருகிராம் 12.6 சதவீதம், இந்தூர் 8.5 சதவீதம், டெல்லி 7.8 சதவீதம், ஆமதாபாத் 5.8 சதவீதம் மற்றும் மும்பை வெறும் 5.5 சதவீதம் மட்டுமே தரமான நடைபாதை வசதிகளை கொண்டிருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நகரங்களில் சுமார் 70 முதல் 80 சதவீத சாலைகளில் பாதுகாப்பான மற்றும் தொடர்ச்சியான நடைபாதை வசதிகளே இல்லை என்பதையும், நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களில் வாகனங்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம், பாதசாரிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்கு வழங்கப்படவில்லை என்பதையும் இந்த ஆய்வு தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.
நடைபாதைகள் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இல்லாததற்கு சாலையோர வணிக ஆக்கிரமிப்புகள், விளம்பரப் பலகைகள், சட்டவிரோத வாகன நிறுத்தங்கள், நடைபாதைகளின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றிகள், மின்கம்பங்கள், குப்பைத்தொட்டிகள் உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டு கட்டமைப்புகளே முக்கிய காரணங்களாக இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நகர்ப்புற திட்டமிடலில் வாகனங்களின் போக்குவரத்துக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டு, பாதசாரிகளுக்கான இடம் தொடர்ந்து சுருக்கப்பட்டு வருவதால், பாதுகாப்பான மற்றும் அனைவரும் பயன்படுத்தக்கூடிய நடைபாதைகளை உருவாக்குவதில் பெரும்பாலான இந்திய நகரங்கள் இன்னும் பின்தங்கியுள்ளன என்றும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
English Summary
What real status Singara Chennai Important information released list best walking cities