தமிழக அரசியலில் புதிய திருப்பம்! தவெகவுக்கு ஆதரவு கொடுக்கும் 30 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்? உஷாராகும் இடதுசாரிகள்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவின் ஒரு பிரிவு தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சியமைக்க தேவையான 118 உறுப்பினர்கள் இல்லாததால், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியில் அமர்ந்தது. தொடர்ந்து விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்.

இந்த நிலையில், தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்த அதிமுகவில் உள்கட்சி அதிருப்தி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 46 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற அதிமுக, பல இடங்களில் மூன்றாவது இடத்திற்கே தள்ளப்பட்டதால், கட்சியின் செயல்திறன் குறித்து மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, தேர்தலுக்கு முன்பே தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என சில மூத்த தலைவர்கள் வலியுறுத்தியிருந்ததாகவும், அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தவெக அரசுக்கு ஆதரவு அளித்து ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இதற்கு இபிஎஸ் சம்மதிக்காததால், சில அதிமுக எம்.எல்.ஏக்கள் தனியாக ஆலோசனை நடத்தியதாகவும், எடப்பாடி பழனிசாமியின் தலைமையை எதிர்த்து கருத்துகள் எழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில், சுமார் 30 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகவும், அதற்கு பதிலாக அதிமுக சார்பில் 8 பேருக்கு அமைச்சரவை வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இதற்கிடையில், தவெக அரசுக்கு வெளிநிலை ஆதரவு அளித்துள்ள விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அதிமுக ஆதரவு தகவலால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, “என்டிஏ கூட்டணி சார்ந்த கட்சிகளுடன் நெருக்கம் கூடாது” என விஜயிடம் அவர்கள் ஏற்கனவே வலியுறுத்தியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் பதவியேற்பு விழாவில் “வந்தே மாதரம்” பாடல் ஒலித்த விவகாரத்திலும் விசிக மற்றும் இடதுசாரிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனால், தவெக அரசு எதிர்காலத்தில் எந்த அரசியல் பாதையை தேர்வு செய்யும் என்பது மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

அதே நேரத்தில், விசிக மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்காலத்தில் ஆட்சியில் பங்கேற்கும் வாய்ப்பை எதிர்பார்த்தே தவெகவுக்கு ஆதரவு அளித்ததாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் அதிமுக ஆதரவு வலுப்பெற்றால், தற்போதைய கூட்டணிக் கட்சிகளின் முக்கியத்துவம் குறையக்கூடும் என்ற அச்சமும் உருவாகியுள்ளது.

தமிழக அரசியல் அடுத்த சில நாட்களில் மேலும் பல திருப்பங்களை சந்திக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New twist in Tamil Nadu politics 30 AIADMK MLAs supporting Tvk Leftists beware


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->