'தீயசக்தி திமுகவை வீழ்த்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிப் படை வெல்வதை யாராலும் தடுக்க இயலாது'; நயினார் நாகேந்திரன்..!
Nainar Nagendran says that no one can now stop the National Democratic Alliance from winning
தீயசக்தி திமுகவை வீழ்த்தி முன்னேற்றத்தின் உறைவிடமாகத் தமிழகத்தை உருமாற்றத் திரண்டிருக்கும் இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிப் படை வெல்வதை இனி யாராலும் தடுக்க முடியாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
''தொடங்கியது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜய பேரிகை!
அன்று ஏரிக்கரை உடையாமல் இருக்க, ராமபிரான் தம்பி லட்சுமணனுடன் சேர்ந்து, வில் அம்புகளுடன் காத்த பழம்பெருமைமிக்க மதுராந்தகத்தில், இன்று தமிழகத்தைக் காக்க நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.
நரேந்திர மோடி, அவர்கள் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழகத் தலைவர்கள் அனைவரும் ஒன்று திரண்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டதைப் போல, தமிழ்நாடு மாற்றத்திற்குத் தயாராகி, திமுகவின் ஆட்சியிலிருந்து விடுபடத் துடிக்கிறது. ஒருபுறம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக நிதி ஒதுக்குவதில் தொடங்கி அனைத்துத் துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்க அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வரும் வேளையில், மறுபுறம் திமுக அரசோ தனது ஊழல் நிர்வாகத்தால், குற்றங்கள் மற்றும் போதை மாஃபியாவின் கூடாரமாகத் தமிழகத்தை மாற்றி வருகிறது.
இத்தகைய கொடுங்கோல் ஆட்சியைத் தூக்கி எறிந்து, மக்கள் நலனுக்காகச் செயல்படும் பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசுடன் தமிழகம் கைகோர்த்து, தமிழக மக்கள் வாழ்விலும் திருப்பரங்குன்றம் தீபத்தூணிலும் ஒளியேற்றப்பட்டு, நமது மாநிலமே பிரகாசிக்கப் போகும் நாளுக்கான தொடக்கமே இன்றைய நிகழ்வு!
தீயசக்தி திமுகவை வீழ்த்தி முன்னேற்றத்தின் உறைவிடமாகத் தமிழகத்தை உருமாற்றத் திரண்டிருக்கும் இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிப் படை வெல்வதை இனி யாராலும் தடுக்க இயலாது! தமிழகம் மீட்கப்பட்டு முன்னேற்றப் பாதையில் வீறுநடையிடுவதையும் தடுக்க இயலாது! வெற்றிவேல்! வீரவேல்!'' என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
Nainar Nagendran says that no one can now stop the National Democratic Alliance from winning