மதுராந்தகம் இடைத்தேர்தல்: திமுக, அதிமுக நல்ல ஆட்சியை வழங்கின!கருணாநிதிக்கும் பாராட்டு.. எடப்பாடி பழனிசாமி பேச்சால் டிவிஸ்ட்! - Seithipunal
Seithipunal


மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாம் தமிழர் கட்சி என ஐந்து முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுராந்தகத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அரசு நிர்வாகத்தில் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை ஆலோசகர்களாக நியமிப்பது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்தார்.

“ஒரு அரசாங்கம் சிறப்பாக செயல்படுவதற்காக அனைத்து ஆட்சிகளிலும் ஆலோசகர்கள் நியமிக்கப்படுவார்கள். திறமையாக பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர்கள் அல்லது துறைச் செயலாளர்களை ஆலோசகர்களாக நியமிப்பார்கள். அவர்களுக்கு அரசு நிர்வாகத்தில் பல ஆண்டுகள் அனுபவம் இருக்கும். அரசுக்கு எப்படி ஆலோசனை வழங்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். அதன்படி அரசு நடவடிக்கை எடுத்து மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தும்.

ஆனால், தவெக ஆட்சியில் ஒரு ஜோதிடரை அரசு ஆலோசகராக நியமிக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் முதலமைச்சருக்கு உதவியாக இருந்தவர்களையும் ஆலோசகர்களாக நியமித்துள்ளனர். தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி உள்ளிட்டோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னொருவரின் பெயர் எனக்கு தெரியவில்லை. இந்த மூன்று பேர்தான் அரசுக்கு ஆலோசனை வழங்குகிறார்கள்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மேலும், “ஒரு துறையைச் சேர்ந்த அதிகாரியாக இருந்தால், எந்த இடத்தில் என்ன தேவை என்பதை அவர் அறிவார். அதற்கேற்ப அரசுக்கு ஆலோசனை வழங்குவார். இது கருணாநிதிக்கும், எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும், எனக்கும் தெரியும். அப்படித்தான் அதிகாரிகளை நியமித்து ஒரு நல்ல அரசாங்கமாக செயல்பட்டோம். திமுக ஆட்சியும் சரி, அதிமுக ஆட்சியும் சரி, அப்படித்தான் நல்ல அரசாங்கமாக செயல்பட்டது. இந்த அரசாங்கத்தில் ஜோதிடர்களையும், தேர்தல் வியூக வகுப்பாளர்களையும் ஆலோசகர்களாக நியமித்தால் எப்படி சிறப்பாக செயல்பட முடியும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தையும், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தொடர்பான நியமனத்தையும் விமர்சித்து எடப்பாடி பழனிசாமி பேசினார். “ஜனநாயகன் படத்தை ஒருவர் தயாரித்தார். அதை பெரிதாக எதிர்பார்த்தனர். அந்தப் படம் டப்பாவாகிவிட்டது. ஜனநாயகன் வந்தால் நாடே அவர் பக்கம் திரும்பிவிடும் என எதிர்பார்த்தனர். ஒரு வாரம் கூட ஓடவில்லை. காற்றுதான் வாங்கியது.

அந்தப் படத்தின் தயாரிப்பாளரை டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்துள்ளார். நாடு உருப்படுமா? கேட்டால் தமிழகத்திற்கும் டெல்லிக்கும் அவர் பாலமாக இருப்பாராம். தமிழகத்தின் பிரச்சினைகளை டெல்லியில் சொல்வதுதான் அவரது பணி. விஜய் அவரது மேக்கப் மேனையும் கூட்டிச் செல்வார். அடுத்த நாள் அவருக்கும் பதவி வழங்குவார்” என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மேற்கொண்டு வரும் பிரசாரம் மற்றும் பரஸ்பர விமர்சனங்களால் தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maduranthakam Byelection DMK and AIADMK delivered good governance Praise for Karunanidhi too Edappadi Palaniswami remarks add a twist


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->