டொனால்ட் டிரம்ப் மிரட்டல்; பாலகிருஷ்ணாவின் 'பகவந்த் கேசரி' வீடியோவுடன் பதிலடி கொடுத்த ஈரான் தூதரகம்!
UNGA Session Trump Threatens Iran Iranian Embassy Counters with Bhagavanth Kesari Movie Clip
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் 81-வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில், "நம்பிக்கையை மீட்டெடுத்தல், மாற்றத்தை நிர்வகித்தல்: அனைவருக்கும் பயனளிக்கும் ஒரு ஐக்கிய நாடுகள் சபை" என்ற கருப்பொருளின் கீழ் 193 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டின் தொடக்க அமர்வில் 40 நிமிடங்கள் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "மத்திய கிழக்கில் புதிய அமைதியை உருவாக்க ஈரானுடன் ஒப்பந்தம் செய்வதா அல்லது ஈரானை உடனடியாக முற்றிலும் அழிப்பதா?" என்று வெளிப்படையாக மிரட்டல் தொனியில் பேசினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளால் ஈரான் மக்களே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். உரையின் போது, மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் புகைப்படத்தையும், போரின் தொடக்க நாட்களில் கொல்லப்பட்ட 150-க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுவர்களின் புகைப்படங்களையும் சபையில் காண்பித்த அவர், ஈரான் ஒருபோதும் யாருக்கும் மண்டியிடாது என்றும், எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார்.
இச்சூழலில், டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கையை எள்ளல் செய்யும் வகையில், ஜிம்பாப்வேயில் உள்ள ஈரான் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்த 'பகவந்த் கேசரி' திரைப்படத்தின் 58 விநாடி வீடியோ காட்சியைப் பகிர்ந்துள்ளது. எதிரிகள் சுடும் துப்பாக்கிக் குண்டுகளை நாயகன் தடுத்து நிறுத்தி, அவர்களை அஞ்ச வைப்பது போன்ற அந்த வீடியோவை பதிவிட்டு, "ஈரானை அழிப்பது பற்றி டிரம்ப் பேசுகிறார்; ஆனால் ஈரான் பலவீனமான நாடு அல்ல என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் சமீபகாலமாக ஹாலிவுட் திரைப்படங்களை விட்டுவிட்டு இந்தியத் திரைப்படங்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் போலிருக்கிறது" என நகைச்சுவையாக அமெரிக்காவை விமர்சித்துள்ளது.
English Summary
UNGA Session Trump Threatens Iran Iranian Embassy Counters with Bhagavanth Kesari Movie Clip