இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2026: முகேஷ் அம்பானியை முந்தி கவுதம் அதானி மீண்டும் முதலிடம்!
Hurun India Rich List 2026 Gautam Adani Reclaims Top Position as Indias Richest
லண்டனைச் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் புகழ்பெற்ற 'ஹுருன்' நிறுவனத்தின் இந்தியக் கிளை, 2026-ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் பெருஞ் செல்வந்தர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இப்புதிய பட்டியலில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியும் அவரது குடும்பத்தினரும் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் என்ற பெருமையை மீண்டும் தட்டிச் சென்றுள்ளனர். கடந்த ஆண்டை விடச் சொத்து மதிப்பில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள அதானி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.9.22 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்ந்து இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு வெளியான ஹுருன் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்திலும், கவுதம் அதானி இரண்டாவது இடத்திலும் இருந்தனர். ஆனால், இந்த ஆண்டு முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.8.63 லட்சம் கோடியாகப் பதிவாகியுள்ளது. இவர்களைத் தொடர்ந்து, லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகின் முன்னணி எஃகு தயாரிப்பு நிறுவனமான ஆர்சிலர் மிட்டல் தலைவர் லட்சுமி நிவாஸ் மிட்டல் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.3.39 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
நாட்டின் பிற முக்கியத் தொழில் அதிபர்களும் இப்பட்டியலின் முன்னணி இடங்களை அலங்கரித்துள்ளனர். சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் சைரஸ் எஸ். பூனாவாலா நான்காவது இடத்தையும், எச்.சி.எல் நிறுவனத்தைச் சேர்ந்த ரோஷினி நாடார் மல்ஹோத்ரா ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர். ரோஷினி நாடார் இந்தியாவின் மிகப்பணக்காரப் பெண்மணியாகவும் நீடிக்கிறார். இவர்களைத் தொடர்ந்து, ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா ஆறாவது இடத்திலும், சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் திலீப் ஷாங்வி ஏழாவது இடத்திலும் உள்ளனர்.
பட்டியலின் இறுதி மூன்று இடங்களில், விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி எட்டாவது இடத்திலும், வேதாந்தா ரிசோர்சஸ் குழுமத்தைச் சேர்ந்த அனில் அகர்வால் ஒன்பதாவது இடத்திலும், டோரன்ட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் சமீர் மேத்தா பத்தாவது இடத்திலும் நிறைவு செய்துள்ளனர். இந்தியத் தொழில்முனைவோரின் உலகளாவிய வளர்ச்சி மற்றும் அவர்களின் பொருளாதார எழுச்சியை இப்பட்டியல் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.
English Summary
Hurun India Rich List 2026 Gautam Adani Reclaims Top Position as Indias Richest