“கல்யாணம் மட்டுமே வாழ்க்கையின் இலக்கு இல்லை!” – திருமணம், தாய்மை குறித்து ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்!
Marriage isnot the only goal in life Shruti Haasan speaks candidly about marriage and motherhood
நடிகை ஸ்ருதி ஹாசன் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விஷயங்களை வெளிப்படையாக பேசுபவர். அந்த வகையில், திருமணம், வாழ்க்கைத் துணை மற்றும் தாய்மை குறித்து அவர் சமீபத்தில் தெரிவித்துள்ள கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. பாலிவுட் நடிகை சோஹா அலி கான் நடத்தும் ‘ஆல் அபௌட் ஹர்’ பாட்காஸ்டில் பங்கேற்ற ஸ்ருதி ஹாசன், தனது வாழ்க்கை குறித்த பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.
திருமணம் மட்டுமே வாழ்க்கையின் ஒரே இலக்கு கிடையாது என்பதே தனது பார்வை என்று ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் நம்மை புரிந்துகொள்ளும் ஒரு துணை இருப்பது முக்கியம் என்றாலும், அதற்காக சமூகத்தால் உருவாக்கப்பட்ட திருமணம் என்ற கட்டமைப்புக்குள் அனைவரும் கட்டாயம் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தனது கடந்தகால வாழ்க்கையைப் பற்றியும் பேசிய ஸ்ருதி, ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு சென்றதாகவும், ஆனால் பல விஷயங்களை யோசித்த பிறகு அந்த முடிவில் இருந்து பின்வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். திருமணம் என்பது வெறும் சட்டப்பூர்வ ஆவணங்களில் கையெழுத்திடுவதோ அல்லது பிரம்மாண்டமாக ஒரு விழா நடத்துவதோ மட்டுமல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவருக்கொருவர் கொடுக்கும் மரியாதை, அன்பு, புரிதல் மற்றும் ஒவ்வொரு நாளும் இணைந்து வாழ்க்கையை எதிர்கொள்வதுதான் உண்மையான உறவு என ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். திருமணம் என்ற பெயரை விட, அந்த உறவில் இருக்கும் புரிதல்தான் தனக்கு முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், மரபுகளுக்கு தான் மதிப்பு கொடுப்பதாக தெரிவித்துள்ள ஸ்ருதி, திருமணம் என்ற பெயரில் அதிகளவு பணத்தை ஆடம்பரமாக செலவு செய்வது குறித்தும் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். திருமணத்துக்காக தேவையில்லாமல் செலவு செய்யப்படும் பெரும் தொகையை கஷ்டப்படும் மக்களுக்கு உதவுவதற்கோ அல்லது சமூகத்துக்கு பயனளிக்கும் நல்ல காரியங்களுக்கோ பயன்படுத்தினால் அது இன்னும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதே பாட்காஸ்டில் தனது உடல்நலம் மற்றும் தாய்மை குறித்தும் ஸ்ருதி ஹாசன் வெளிப்படையாக பேசியுள்ளார். கடந்த காலத்தில் பிசிஓஎஸ் பிரச்னை இருந்ததால், எதிர்காலத்தில் கர்ப்பம் தரிப்பதில் சிரமம் ஏற்படுமோ என்ற அச்சம் தனக்கு இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
குழந்தை குறித்து நினைக்கும் போதெல்லாம் அந்த பயமும் கவலையும் தனக்குள் இருந்ததாக தெரிவித்த ஸ்ருதி, சமீபத்தில் தனது மகப்பேறு மருத்துவரை சந்தித்து பேசிய பிறகு அந்த அச்சம் குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். தாயாக வேண்டும் என்ற இயல்பான ஆசை தனக்கும் இருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
குழந்தை பெற்றுக்கொள்வதற்கு திருமணம் கட்டாயம் என்ற கருத்துடன் தான் உடன்படவில்லை என்றும் ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார். திருமணம் செய்யாமலேயே தாயாகும் வாய்ப்பு, குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகள் இன்றைய காலத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது வாழ்க்கையிலும் எதிர்காலத்தில் இதுபோன்ற முடிவுகளை திறந்த மனதுடன் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார். திருமணம் மற்றும் தாய்மை போன்ற தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளை ஒவ்வொருவரும் தங்களது சூழ்நிலை மற்றும் விருப்பத்துக்கு ஏற்ப தீர்மானிக்க வேண்டும் என்பதே அவரது பேச்சின் மையமாக அமைந்துள்ளது.
ஸ்ருதி ஹாசன் திருமணம், உறவு மற்றும் தாய்மை குறித்து நேரடியாகவும் வெளிப்படையாகவும் பேசியுள்ள இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவரது கருத்துகளுக்கு நெட்டிசன்கள் பல்வேறு விதமான விமர்சனங்களையும் ஆதரவான கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
English Summary
Marriage isnot the only goal in life Shruti Haasan speaks candidly about marriage and motherhood