மின்வெட்டை சமாளிக்க புதிய திட்டம்.. தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ்!
New plan to tackle power cuts Battery energy storage in Tamil Nadu starting next week
தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிக்கும் வகையில் மின் உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும், மின்சாரத்தை சேமித்து வைத்து, மின் தேவை அதிகரிக்கும் நேரங்களில் பயன்படுத்தும் வகையில் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் திட்டம் அடுத்த வாரம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்து, தமிழகத்தின் மின் தேவை மற்றும் மின்வெட்டு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
தமிழகத்தில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதற்கு முறையான பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததும் ஒரு காரணம் என்று அமைச்சர் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் நாள்தோறும் சுமார் 30 ஆயிரம் மின்சாரப் புகார்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு வருவதாகவும், இந்த புகார்களுக்கு விரைவாக தீர்வு காண செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மின் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்தும் வகையில் புதிதாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், களப்பணிகளை வேகப்படுத்தும் நோக்கில் 18 ஆயிரம் ஒப்பந்த பணியாளர்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சுமார் 26 ஆயிரம் மெகாவாட் வரை மின் தேவை ஏற்படும் நிலையில், அந்த தேவையை சமாளிக்கும் வகையில் தேவையான மின் உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அதே நேரத்தில், மின் பழுதுகளை சரிசெய்யும் பணிகளுக்கு பொதுமக்களும் தேவையான கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மின்சாரத்தை சேமித்து வைத்து, தேவை அதிகரிக்கும் நேரங்களில் பயன்படுத்தும் வகையில் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்தியாவில் முதன்முறையாக இந்த வகையிலான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறிய அவர், மின் தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தார். இந்த திட்டம் அடுத்த வாரம் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, மின் விநியோகம் சீராக இருக்கும் பகுதிகளிலும் பழுதடைந்த நிலையில் உள்ள மின்மாற்றிகளை முன்கூட்டியே கண்டறிந்து மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் பழுதடைந்த நிலையில் உள்ள சுமார் 6 ஆயிரம் மின்மாற்றிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து மின்வெட்டு தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், பராமரிப்பு பணிகளை தீவிரப்படுத்துதல், கூடுதல் பணியாளர்களை களமிறக்குதல், AI தொழில்நுட்பத்தின் மூலம் புகார்களை விரைவாக கையாளுதல் மற்றும் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக மின்சாரத்துறை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
English Summary
New plan to tackle power cuts Battery energy storage in Tamil Nadu starting next week