“ஆட்டுக்கு இருக்கும் மூளை கூட தவெகவினருக்கு இல்லை!” – விஜய்யை கடுமையாக சாடிய சீமான்.. ஆதவ் அர்ஜுனா குறித்து பரபரப்பு பேச்சு! - Seithipunal
Seithipunal


தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து பிரசாரம் செய்த சீமான், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, ஆதவ் அர்ஜுனா தன்னை சந்தித்தபோது கூட்டணி தொடர்பாகவும், துணை முதலமைச்சர் பதவி வழங்குவது குறித்தும் பேசியதாக சீமான் கூறியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

பிரசாரக் கூட்டத்தில் பேசிய சீமான், “ஆதவ் அர்ஜுனா என்னை வந்து சந்தித்தார். எடப்பாடி பழனிசாமியுடன் நான் கூட்டணி வைக்க வேண்டும் என்றும், எனக்கு துணை முதலமைச்சர் பதவி தருவதாகவும் கூறினார். அதற்கு நான் ஒப்புக்கொள்ளாதபோது வேளாண்துறை அமைச்சர் பதவி வழங்கலாம் என்றும் கூறினார்” என தெரிவித்தார்.

தொடர்ந்து தவெகவை கடுமையாக விமர்சித்த சீமான், “யார் நீங்கள் எல்லாம்? ஆட்டுக்குக் கூட கொஞ்சம் மூளை இருக்கிறது. இந்த வெற்றிக் கழகத்தில் இருப்பவர்களுக்கு அது கூட இல்லை” என்று காட்டமாக பேசினார். மக்களின் பிரச்னைகளை மனதில் இருந்து பேசத் தெரியாதவர்கள் தலைவர்களாக முடியாது என்றும் அவர் விமர்சித்தார்.

“குறிப்புகளோடு பேசுகிறவன் தலைவன் அல்ல. குறிக்கோளோடு பேசுகிறவன்தான் தலைவன். நாங்கள் 15 ஆண்டுகளாக திராவிட அரசியலுக்கு எதிரான அரசியலை கட்டமைத்து வைத்தோம். அவர் வந்து அதை அறுவடை செய்துவிட்டார்” என்றும் சீமான் கூறினார்.

தொடர்ந்து தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார். “தம்பி ஆட்சியில் நீங்களும் வாழ்கிறீர்கள், நானும் வாழ்கிறேன். எதாவது ஒரு நாள் மக்கள் தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை என்று சாலையில் இறங்கி போராடினால், நாங்கள் விசில் ஊதிக்கொண்டே வந்து கொண்டிருப்போம்” என்று கூறினார்.

சட்டம்-ஒழுங்கு தொடர்பான விவாதத்தையும் சீமான் தனது பேச்சில் குறிப்பிட்டார். சட்டப்பேரவையில் சட்டம்-ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு உடனடியாக பதில் அளிக்காமல் பின்னர் பேசுவதாக கூறுவது குறித்து அவர் விமர்சித்தார். “எழுதி படிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கிற்கும் சர்க்காரியா கமிஷனுக்கும், மிசாவுக்கும் என்ன சம்பந்தம்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், தமிழகத்தில் தற்போது நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறித்து பேசிய சீமான், அவை தொடக்க நிலை மட்டுமே என்றும், எதிர்காலத்தில் தனது ஆட்சி அமைந்தால் குற்றங்களை கட்டுப்படுத்துவோம் என்றும் கூறினார். “இப்போது ஆங்காங்கே குற்றங்கள் நடக்கின்றன. இது தொடக்க நிலைதான். போகப்போக இந்த குற்றங்கள் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும். எங்கள் ஆட்சியில் போகப்போக குற்றங்களை குறைப்போம் என்ற உறுதியை நான் தருகிறேன்” என அவர் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமியையும் தனது பேச்சில் விமர்சித்த சீமான், அவரது அரசியல் செயல்பாடுகள் தொடர்பாக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார். “சர்க்காரியா கமிஷனிலே வாங்கிப் பழகிய கை, பேசிப் பழகிய பொய், போட்டுப் பழகிய பை” என அவர் விமர்சனம் செய்தார். அதனால்தான் அவரை மூன்று முறை முதலமைச்சராக்கியதாக ஒரு கூட்டம் இருப்பதாகவும் சீமான் கூறினார்.

தொடர்ந்து முதலமைச்சர் விஜய்யை நோக்கி கேள்விகளை எழுப்பிய சீமான், “நீங்களே காட்டுவேன் என்று சொல்கிறீர்கள். முதல்வர் அவர்களே, நீங்கள் என்ன காட்டினீர்கள்? ஏதாவது ஒரு போராட்டத்தில் பங்கேற்று மக்களின் பிரச்னையில் உங்களுக்கு இருக்கும் அக்கறையை காட்டினீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சீமானின் இந்த பேச்சு தற்போது அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக ஆதவ் அர்ஜுனா தன்னை சந்தித்து துணை முதலமைச்சர் பதவி உள்ளிட்ட பதவிகள் குறித்து பேசியதாக சீமான் தெரிவித்திருப்பது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK members donot even have the brains of a goat Seeman lashes out at Vijay makes sensational remarks about Aadhav Arjuna


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->