S.I.R குறித்து எழுந்த கேள்விகள்! சர்ச்சையில் தேர்தல் முடிவுகள்!தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகனும்! ஸ்டாலின் டிமாண்ட்! - Seithipunal
Seithipunal


தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் நீடிக்கக் கூடாது என்றும், அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் ஆணையத்தில் இதுவரை நடைபெற்றதாக கூறப்படும் விவகாரங்கள் அனைத்தும் முறையாக விசாரிக்கப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணியான SIR தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களில் இருவரான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவித்ததாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது. தங்களது அறிவு அல்லது ஒப்புதல் இல்லாமல் சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக புதிய வாக்காளர்களை சேர்ப்பது, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவது, பெயர்களை மீண்டும் சேர்ப்பது, Form 6-ல் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் வாக்காளர் தரவுத்தளத்தின் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தேர்தல் ஆணையர்களும் கேள்வி எழுப்பியதாக அந்த விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் நான்கு முறை வரை ஆட்சேபனைகள் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

Form 6 தொடர்பாகவும் இரு தேர்தல் ஆணையர்கள் ஆட்சேபனை தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. SIR நடைமுறையுடன் தொடர்புடைய புதிய தகவல்களை Form 6 விண்ணப்பத்தில் சேர்ப்பதற்கு முன்பு, அதற்கான சட்ட விதிகளில் உரிய திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று விவேக் ஜோஷி குறிப்பிட்டதாகவும், அதற்கு சுக்பீர் சிங் சந்து உடன்பட்டதாகவும் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தெரிவித்துள்ளது.

அதேபோல், வாக்காளர் பட்டியல் தொடர்பான தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் மத்திய அளவில் அதிகமாக மையப்படுத்தப்படுவது குறித்தும் இரு தேர்தல் ஆணையர்கள் கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக மாநில அளவில் பணியாற்றும் Electoral Registration Officers எனப்படும் ERO-க்களின் முடிவுகளை மத்தியப்படுத்தப்பட்ட மென்பொருள் அமைப்பு பாதிக்கும் சூழல் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் தனது விளக்கத்தையும் வெளியிட்டுள்ளது. கடந்த ஓராண்டில் தேர்தல் ஆணையம் எடுத்த அனைத்து முடிவுகளும் முழு ஆணையத்தின் ஒருமித்த முடிவுகளாகவே இருந்ததாகவும், உள்நிலை ஆலோசனைகளில் மாறுபட்ட கருத்துகள் தெரிவிப்பது எந்த நிறுவனத்திலும் நடைபெறும் இயல்பான செயல்முறையே என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்த பின்னணியில்தான் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இந்த விவகாரத்தை முன்வைத்து, ஞானேஷ் குமார் பதவியில் நீடிக்கக் கூடாது என்றும் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தனது சமூக வலைதளப் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

SIR நடவடிக்கைக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவசரமாக வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக விமர்சித்துள்ளார். மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த விவகாரம் தொடர்பாக கடுமையான அரசியல் மற்றும் சட்டரீதியான விவாதங்கள் ஏற்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தேர்தல் ஆணையத்தில் மூன்று உறுப்பினர்கள் இணைந்து செயல்பட வேண்டிய நிலையில், இரு ஆணையர்களுக்கே அமைப்புக்குள் எடுக்கப்படும் சில முடிவுகள் தெரியாமல் இருந்ததாக கூறப்படுவது தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டிய விவகாரம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பகத்தன்மை பாதிக்கப்படாத வகையில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பது தொடர்பாக மேல்முறையீடுகள் செய்யப்பட்டதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையர்களுக்கே முழுமையான தகவல் இல்லாத நிலை இருந்ததாகவும் ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதத்தில் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் வழங்கியிருந்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல்களின் பின்னணியில், SIR நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் திமுக சார்பில் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, தேர்தல் ஆணையம் தனது அனைத்து முக்கிய முடிவுகளும் முழு ஆணையத்தின் ஒருமித்த ஒப்புதலுடன் எடுக்கப்பட்டதாக கூறியிருப்பதால், இரு தரப்பினரின் நிலைப்பாடுகளும் தற்போது விவாதப் பொருளாகியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Questions raised regarding SIR Election results mired in controversy Chief Election Commissioner must resign Stalin demands


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->