ரூ.46 கோடி மோசடிப் புகார் மறுப்பு: "எனக்கு ராதா ₹97 கோடி தர வேண்டும்" — நடிகை அம்பிகா அதிரடி பேட்டி!
Ambika Rejects Rs 46 Cr Fraud Allegations Claims Sister Radha Owes Her Rs 97 Cr
தமிழ் திரையுலகின் மூத்த சகோதரிகளான நடிகைகள் அம்பிகா மற்றும் ராதா இடையே சொத்து மற்றும் பணப் தகராறு காரணமாகக் கடுமையான மோதல் வெடித்துள்ள நிலையில், தனது காசோலைகளைத் திருடி ₹46 கோடி மோசடி செய்ய முயன்றதாக ராதா அளித்த புகாருக்கு நடிகை அம்பிகா செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரின் விசாரணைக்கு ஆஜராகவுள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை அம்பிகா, "எனது சொந்த வீட்டில் இருந்த காசோலையை நான் எவ்வாறு திருட முடியும்? எனது சகோதரி ராதா தான் குடும்பச் சொத்துக்களைப் பிரித்த வகையில் எனக்கு 5 காசோலைகளைக் கொடுத்தார். ஆனால், காசோலைகளைக் கொடுத்துவிட்டு வங்கியின் மூலம் பணப் பரிவர்த்தனையை நிறுத்தியதும் அவரேதான். இதனால் காசோலை பவுன்ஸ் ஆகி எனக்குத் தான் பெருமளவில் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும், போரூர் ஏ.ஆர்.எஸ் (ARS) கார்டன் உருவானதில் தான் முக்கியப் பங்காற்றியதாகவும், ஆனால் அச் சொத்திலிருந்து தனது பெயர் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அத்துடன், தனது நகைகள் பலவற்றை ராதா வைத்துள்ளதாகவும், அவருக்குத் தங்கம் என்றால் ஒரு பலவீனம் உண்டு என்றும் அம்பிகா குறிப்பிட்டார். "ராதாவின் மகள் திருமணத்தில் நான் ஒரு வேலைக்காரியைப் போலப் உழைத்தேன். ராதாவின் சொத்து மதிப்பு சுமார் ₹5,000 கோடி வரை இருக்கும். சொத்து மற்றும் தொழில் ரீதியாக ராதா தரப்பில் இருந்து எனக்கு ₹97 கோடி ரூபாய் பாக்கி வர வேண்டியுள்ளது. ஏ.ஆர்.எஸ். கார்டன் கூட்டாண்மைப் பங்கும் எனக்கு வழங்கப்பட வேண்டும். நான் உண்மைகளை வெளிப்படையாகப் பேசினால் ராதா சிறைக்குச் செல்ல நேரிடும்" என்றும் அவர் எச்சரித்தார்.
முன்னதாக, நடிகை அம்பிகா அளித்த புகாரின் பேரில் ராதாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசார் அழைத்திருந்த நிலையில், தனக்கு மூட்டு வலி இருப்பதால் வரும் திங்கட்கிழமை ஆஜராவதாக ராதா தெரிவித்துள்ளார். இந்நிலையில், ராதா அளித்த ₹46 கோடி மோசடி முயற்சி புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளிப்பதாக நடிகை அம்பிகா தெரிவித்துள்ளார்.
English Summary
Ambika Rejects Rs 46 Cr Fraud Allegations Claims Sister Radha Owes Her Rs 97 Cr