“விஜய் முதல்வரானது அதிர்ஷ்டம் மட்டுமே"!ஒரே இடத்தில் நிலையாக நிற்க வேண்டும் - ரோஜா ஓபன் டாக்!
Vijay becoming Chief Minister was purely a matter of luck He needs to stand firm in one place Roja speaks her mind!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று அவருடன் இணைந்து நடித்த தானே கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார். விஜய் மிகவும் அமைதியானவர் என்றும், அரசியலுக்கு வந்த பிறகு அவர் மேற்கொண்ட அரசியல் பயணம் குறித்தும் பல்வேறு கருத்துகளை ரோஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் நீண்ட காலம் முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா, பின்னர் ஆந்திர அரசியலில் தீவிரமாக களமிறங்கினார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2022-ம் ஆண்டு ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார். ஆனால் அதன்பிறகு நடைபெற்ற தேர்தலில் அவர் தோல்வியை சந்தித்தார்.
பல ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்த ரோஜா, இந்த ஆண்டு தமிழில் வெளியான ‘அன்பே டயானா’ திரைப்படத்தில் நடிகர் பாரியின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றார்.
இந்த நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசிய ரோஜா, “நடிகராக இருந்த விஜய் அரசியலுக்கு வருவார் என்று அவருடன் நடித்த நானே கனவில் கூட நினைக்கவில்லை. அவர் அவ்வளவு அமைதியானவர். அரசியலுக்கு வந்தால் அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல வேண்டும். மக்களின் பிரச்னைகளை கேட்க வேண்டும். ஆனால் விஜய் பாதி தமிழ்நாட்டில் கூட பிரச்சாரம் செய்யாமல் முதலமைச்சராகிவிட்டார்” என கூறியுள்ளார்.
மேலும், விஜய் முதலமைச்சர் பதவிக்கு வந்ததற்கு அவரது அரசியல் முயற்சிகளைவிட அதிர்ஷ்டமே முக்கிய காரணம் என்ற வகையில் ரோஜா தனது கருத்தை தெரிவித்துள்ளார். சினிமாவில் வில்லன்களை எதிர்த்து மக்களை காப்பாற்றும் கதாபாத்திரங்களை விஜய் ஏராளமான படங்களில் நடித்திருப்பதால், அதேபோல் நிஜ வாழ்க்கையிலும் அவர் மக்களை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் மக்கள் அவருக்கு வாக்களித்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“விஜய் அரசியலில் குதித்த உடனேயே முதலமைச்சராகிவிட்டது அதிர்ஷ்டம் மட்டுமே. அதற்காக அவர் எந்த பெரிய முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக கரூர் சம்பவத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் உள்ள பல தொகுதிகளுக்கு அவர் பிரச்சாரத்திற்குக்கூட செல்லவில்லை. ஆனாலும் மக்கள் அவரை நம்பி முதலமைச்சராக மாற்றிவிட்டனர்” என்ற வகையில் ரோஜா பேசியுள்ளார்.
இதற்கிடையே, விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை புதுச்சேரி, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் வலுப்படுத்த முயற்சி செய்து வருவது குறித்தும் ரோஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஒரே நேரத்தில் பல இடங்களில் அரசியல் கட்சியை விரிவுபடுத்துவது தொடர்பாக தனது பார்வையை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரோஜா, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் இதுபோன்ற வாய்ப்புகள் வந்ததாகவும், பெங்களூரு, தமிழ்நாடு உள்ளிட்ட பல இடங்களில் அரசியல் கட்சிகளை தொடங்கலாம் என்று அவரிடம் கூறப்பட்டதாகவும் தெரிவித்தார். ஆனால், ஜெகன் மோகன் ரெட்டி அதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக அவர் கூறினார்.
“பல இடங்களில் கால் வைக்கக் கூடாது. ஒரு இடத்தில் நிலையாக நிற்காமல் பல இடங்களில் கால் வைத்தால் அனைத்து இடத்திலும் இல்லாமல் போய்விடுவோம்” என்ற கருத்தையும் ரோஜா முன்வைத்துள்ளார்.
விஜய்யின் அரசியல் பயணம், அவரது முதல்வர் பதவி, தமிழகத்தை தாண்டி கட்சியை விரிவுபடுத்தும் முயற்சி என பல்வேறு விவகாரங்கள் குறித்து ரோஜா தெரிவித்துள்ள இந்த கருத்துகள் தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளன.
English Summary
Vijay becoming Chief Minister was purely a matter of luck He needs to stand firm in one place Roja speaks her mind!