“இது கனவு போல இருக்கிறது!” – தேசிய விருது பெற்ற சச்சனா நமிதாஸ் உருக்கமான பதிவு.. குவியும் வாழ்த்துகள்!
It feels like a dream National Award winner Sachana Namidas shares an emotional post Wishes pour in
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் இன்று நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விருது பெற்ற கலைஞர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்த விழாவில் நடிகை சச்சனா நமிதாஸும் தேசிய விருதை பெற்றுக்கொண்டார்.
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், சச்சனா நமிதாஸ், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மகாராஜா’. திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக சச்சனா நமிதாஸ் நடித்திருந்தார். தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்த்த அவருக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து தேசிய விருதை பெற்றுக்கொண்ட சச்சனா நமிதாஸ், அந்த மகிழ்ச்சியான தருணத்தின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “இதை எப்படித் தொடங்குவது என்றே எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், இப்போதும் கூட இது ஏதோ ஒரு கனவு போலத்தான் தோன்றுகிறது” என்று தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
“இன்று தேசிய விருதை கையில் ஏந்தியபடி நான் இங்கே நிற்கிறேன். இந்த தருணத்தில் நான் கடந்து வந்த பாதையை மட்டுமே நினைத்துப் பார்க்க முடிகிறது. இந்த விருதை வெறும் விருதாக மட்டும் என்னால் பார்க்க முடியவில்லை. இதன் பின்னால் இருந்த அத்தனை போராட்டங்களும் என் நினைவுக்கு வருகின்றன” என்று சச்சனா குறிப்பிட்டுள்ளார்.
தனது பெற்றோர், குடும்பம் மற்றும் வாழ்க்கை எளிதாக இல்லாத காலகட்டங்களையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். “அன்றைய சூழலை சமாளித்துக்கொண்டு எப்படியாவது முன்னேறிச் செல்ல நாங்கள் போராடிய நாட்கள் நினைவுக்கு வருகின்றன. அந்த நாட்களும், அந்த போராட்டங்களும் இன்று நான் பெற்றிருக்கும் இந்த விருதின் பின்னால் இருக்கின்றன” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு எந்தவிதமான சிறப்பு பின்னணியும் இல்லை என்றும், வேலை செய்து தனது குடும்பத்திற்கு உதவ வேண்டும், பெற்றோரை பெருமைப்படுத்த வேண்டும் என்ற ஆசையுடன் பயணத்தை தொடங்கிய ஒரு சாதாரணப் பெண் தான் என்றும் சச்சனா நமிதாஸ் தெரிவித்துள்ளார்.
“சில சமயங்களில் பயமும் குழப்பமும் என்னை ஆட்கொண்டன. பெரிய அளவில் என்னால் ஏதாவது சாதிக்க முடியுமா என்ற சந்தேகமும் எனக்குள் எழுந்தது. ஆனால் எப்படியோ என் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருந்தேன். இன்று அதே பெண் ஒரு தேசிய விருது பெற்றவராக இங்கே நிற்கிறாள்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
சச்சனா நமிதாஸின் இந்த உருக்கமான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. சினிமா ரசிகர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஒரு சாதாரண கனவுடன் தொடங்கிய தனது பயணம் தேசிய விருது வரை வந்திருப்பதை சச்சனா பகிர்ந்திருக்கும் விதம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
It feels like a dream National Award winner Sachana Namidas shares an emotional post Wishes pour in